தயரதன் தேவிமார் தீக்குளித்து நற்கதி பெறுதல்  

2238. இழையும் ஆரமும் இடையும் மின்னிட,
குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள்தாம்
தழை இல் முண்டகம் தழுவு கானிடை
முழையில் மஞ்ஞைபோல், எரியில் மூழ்கினார்.

     குழையும் - ஒல்கித் தளரும்; மா மலர்க் கொம்பு அனார்கள்தாம்-
சிறந்த மலர் பூத்த கொம்பினை ஒத்தவர்களாகிய தேவியர்கள்; இழையும்
ஆரமும் இடையும்மின்னிட
- பொன் வடமும், முத்துவடமும், இடுப்பும்
மாறிமாறி மின்னொளி செய்ய; தழைஇல் முண்டகம் தழுவு காளிடை -
தழையற்ற (செந்)தாமரை மலர்களே நிரம்பியுள்ளகாட்டினிடத்து; முழையில்
மஞ்ஞை போல்
- மலையிடத்து வாழும் மயில் கூட்டம்மூழ்குவதுபோல;
எரியில் மூழ்கினார் - நெருப்பில் மூழ்கி விண்ணுலகு சென்றனர்.

     செந்தாரைக் காட்டினுள் மயில்கல் புகுவதுபோல் நெருப்பிடையே
தேவி மார்மூழ்கினர்என்பதாம்

     தாமரை மலர் நீரிடை ஆகவும் ‘கானிடை’ என்றது இடம்
நோக்கியன்று; தாமரைப் பூவின்நெருக்கமும் மிகுதியும் நோக்கிக்
கூறப்பெற்றது. இங்ஙனம் கூறுவது “தாமரைக் காடு அனைய மேனித்தனிச்
சுடரே” (திருவா. திருச்.26) என்ற இடத்திலும் காண்க.  புதல்வர்ப் பெறாத
அறுபதினாயிரம் தேவிமார் இவ்வாறு நெருப்பில் மூழ்கி நற்கதி பெற்றனர்
என்க. ‘முழையில்மஞ்ஞை’ வாழும் இடம் கட்டியது.                 137