வசிட்டனும் மந்திரக்கிழவரும் பரதனை வந்து அடைதல்  

2242.முற்றும் முற்றுவித்து உதவி, மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடரத் தோன்றினான்,
வெற்றி மா தவன் - வினை முடித்த அக்
கொற்ற வேல் நெடுங் குமரற் கூறுவான்;

    வெற்றி மா தவன்- எய்தன எய்தற்பாலதாய சிறந்த பெருந்தவத்தைச்
செய்து  முடித்த வசிட்டன்; முற்றும் - தயரதனுக்குரிய சடங்குகள் முழுதும்;
முற்றுவித்து  உதவி - நிரம்புமாறு செய்துதவி; (பிறகு) மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடர
- முப்புரிநூல் அணிந்த வேதியர் அனைவரும்
தன்னைத் தொடர்ந்து வர; தோன்றினான் - பரதன் அரண்மனையில்
தோன்றினான்; வினை முடித்த - தயரதனுக்குச் செய்யவேண்டிய இறுதிச்
செயல்களைச் செய்து நிறைவேற்றிய; அக் கொற்ற வேல் நெடுங் குமரன்-
அந்த வெற்றி பொருந்திய வேலை ஏந்திய உயர்ந்தகுமரனாகிய பரதனுக்கு;
கூறுவான் - எடுத்துச் சொல்லலானான்.

     முன்பாடலிற்போலவே சடங்குகளைப் பரதன் முடித்தாக இப்பாடலிலும்
கூறினான். முன் பாடலிற்போலவே தலைமைபற்றிப் பரதனைக் குறித்த தாகக்
கொள்க வான்மீகம் பதினான்காம் நாள் வைகறையில் அரசனை
நியமிப்பவர்கள் பரதனைச் சேர்ந்துசொல்லத் தொடங்கினர் என்று கூறும்.
‘வெற்றி மாதவன்’ கௌசிக மகாராஜாவை வெற்றிகொண்டு
விசுவாமித்திரனாக்கியது குறித்தது; ‘மும்மை நூல் சுற்றம்’ என்றது
அந்தணரைக் குறித்தது; இவர்வசிட்டனுடன் வந்தோர் என்க.          141