மந்திரக் கிழவர் முதலியோர் அரசவை அடைதல்  

கலிவிருத்தம்

2244.வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும், ஆண்டையான், என,
விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்;
பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர்.

   வரன்முறை தெரிந்து உணர் -அரச குலத்தின் மரபு முறைகளை
ஆராய்ந்து உணர்ந்த; மறையின் மாதவத்து- வேதவழியில் செய்யப்படும்
தவங்களைச் செய்துள்ள; அருமறை முனிவனும் -வேதத்திற்சிறந்தவசிட்ட
முனிவனும்; ஆண்டையான் என - (பரதன் உள்ள)அவ்விடத்தில்
இருக்கின்றான் என்றறிந்து; விரகின் எய்தினர் -
(மந்திரக்கிழவர்கள்)
ஆலோசனைக்குரிய சூழ்ச்சியோடு; விரைவின் வந்து-விரைந்துஅரசவைக்கு
வந்து; ஈண்டினர் - நெருங்கி; பரியும்நெஞ்சினர் பரதனை
வணங்கினர்
- அன்பினால் இரங்கும் மனம் உடையவராய்ப் பரதனை
வணங்கினார்கள்.

     மேற் படலத்து இறுதிச் செய்யுளில் (2243.) ‘மந்திரக்கிழவர்’
என்பதனை இங்குத் தொடர்க. ‘விரகு’ என்பது இங்கு ஆலோசனை. இனி,
நடக்கவேண்டியசெய்திபற்றிய ஆலோசிப்போடு வந்தார்கள் என அறிக.
‘பரிதல்’ துன்பச் சூழலில் பரதன் அரசுஏற்க நேர்ந்துள்ள இக்கட்டான
நிலையால் மனம் கசிந்து இரங்கலாம். மந்திரக் கிழவர்பரதனினும் மூத்தோர்
ஆயினும் இப்போது பரதன் சக்கரவர்த்தி ஆதலின் ‘வணங்கினர்’ என்க.
‘அருமறை முனிவன்’ என்பதனுள் ‘அருமறை’ பெயரடை ஆதலின் கூறியது
கூறுல் ஆகாமை  உணர்க.