அரசவையோர் பரதனைப் புகழ்தல் 2262. | ‘ஆன்ற பேர் அரசனும் இருப்ப, ஐயனும் ஏன்றனன், மணி முடி ஏந்த; ஏந்தல் நீ, வான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந் தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்? |
ஆன்ற - குணங்களான் அமைந்த; பேர் அரசனும் - பெருமை மிக்க தயரதனும்;இருப்ப - உயிரோடு இருக்கின்றபோதே; ஐயனும் - இராமனும்; மணிமுடி ஏந்த -மணிகள் அழுத்திச் செய்யப்பெற்ற மகுடத்தைத் (தலையில்) தாங்க; ஏன்றனன் -உடன்பட்டான்; ஏந்தல் நீ - பெருமையின் உயர்ந்த பரதனே! நீ; வான் தொடர்திருவினை - மிக உயர்ந்த பாரம்பரியமாக வருகின்ற அரசச்செல்வத்தை; மறுத்தி -வேண்டாம் என்கிறாய்; மன் இளந்தோன்றல்கள் - அரசகுலத்தில் தோன்றிய இளைய குமாரர்களில்; நின்னின் தோன்றினார்? - உன்னைப் போலப் புகழுடன் தோன்றியோர்;யார் உளர் - யார் இருக்கின்றார்கள்?’ (எவரும் இல்லை என்றபடி) “யாது கொற்றவன் ஏவியது அதுசெயல் அன்றோ, நீதி எற்கு” (1382.) “மனத்து மன்னன்ஏவலின் திறம்ப அஞ்சி, இருளுடை உலகம் தாங்கம் இன்னலுக்கு இயைந்து நின்றான்” (1603.) என்றசொற்களால் இராமன் மனநிலை போதரும். மன்னவன் இருக்கின்றபோது அவன் ஆணை மேற் கொண்டுஅரசேற்க உடன்பட்ட இராமனையும், மன்னவன் இல்லாத போதும் அவன் ஆணையாலும் (வரத்தாலும்)அரசேற்க உடன்படாத பரதனையும் ஒப்பிட்டுப் போற்றினர் என்க. 19 |