இராமனை அழைத்துவருதல் பற்றி முரசு அறைவிக்கச் சத்துருக்கனனிடம் பரதன் கூறுதல் 2264. | குரிசிலும், தம்பியைக் கூவி, ‘கொண்டலின் முரசு அறைந்து, “ இந் நகர் முறைமை வேந்தனைத் தருதும் ஈண்டு” என்பது சாற்றி, தானையை, “விரைவினில் எழுக!” என, விளம்புவாய்’ என்றான். |
குரிசிலும் - பரதனும்; தம்பியைக் கூவி - (தன்) இளவலான சத்துருக்கனனைஅழைத்து; கொண்டலின் - மேகம் போல; முரசு அறைந்து - இடியென ஒலிக்கும்முரசினை அடித்து; இந் நகர் முறைமை வேந்தனை - இந்நகரத்திற்கு மரபு வழிப்படி அரசனாகவேண்டிய இராமனை; ஈண்டுத் தருதும்’ - காட்டிலிருந்து அயோத்திக்கு அழைத்து வரப்போகிறோம்; என்பது சாற்றி - என்னும் செய்தியை அறிவித்து; தானையை - நம்சேனைகளை; ‘விரைவினில் எழுக’ என - (இராமனை அழைத்து வர) விரைவாகப் புறப்படுக என்று;விளம்புவாய்’ - சொல்லுவாயாக;’ என்றான் - என்று கட்டளை இட்டான். இராமனே அயோத்தியரசன் என்பதில் மாறாத கருத்துடையவன் பரதன் ஆதலால், அரசனைஅழைக்கச் செல்லும் முறைப்படி சேனைகள் வரும்படி பணித்தான் என்க. தனிமனிதரை அழைத்தற்கும்,அரசர்களை அழைத்தற்கும் வேறுபாடு உண்டு. இனி, தானொருவனே சென்று அழைத்தால் இராமன் வராதிருக்கவும் கூடும். தன் பிரிவினால் வருந்திக் கண்ணும், நீருமாய் இருக்கும் இவ்வளவுபேரையும் கண்டால் மனம் இரங்கி வருவான் என்று கருதி, சேனைகளையும், மக்களையும் உடன்வரப்பறையறைந்து தெரிவித்தான் என்பதும் ஒன்று; ஏற்பன அறிக. 21 |