சத்துருக்கனன் உரை கேட்ட மக்கள் மகிழ்ச்சி 2265. | நல்லவன் உரைசெய, நம்பி கூறலும் அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் ஒல்லென இரைத்தலால் - உயிர் இல் யாக்கை அச் சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே. |
நல்லவன் உரை செய- நற்குணத்தாற் சிறந்த பரதன் பணிக்க; நம்பி- சத்துருக்கனன்; கூறலும் - (இராமனைஅழைத்து வரும் செய்தியைச்) சொல்லுதலும்; அல்லலின் - துன்பத்தால்; அழுங்கிய- இரங்கிக்கெட்ட; அன்பின் மாநகர் - இராமன்பால் அயரா அன்பினை உடைய; அயோத்தி மாநகர மக்கள்; உயிர் இல் யாக்கை- உயிர் இல்லாத உடம்புகள் எல்லாம்; அச்சொல் எனும் அமிழ்தினால்- அந்த வார்த்தை என்னும் அமுதத்தால்; துளிர்த்தது -(மீண்டும் உயிர் பெற்றுத்) துளிர்விட்டது; என்ன - என்று சொல்லும்படி; ஒல்லென -பேராலி உண்டாகுமாறு; இரைத்தது - மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அழுங்கிய - இரங்கிக் கெட்ட “அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்” (தொல். சொல், உரி.52.) என்பது காண்க; இரண்டினுள் ஒன்று உரைக்கவும் பெறும். உயிரற்ற உடம்பு துளிர்த்தாற்போலஎன்றது பட்ட மரம் துளிர்விடம் பிழைத்தலாகும் ஆதலின் இங்கேயும் உயிர் வந்ததாக ஆகும்என்க. துளிர்த்தல் என்பதால் உருவக அணியும், ‘என்ன’ என்ற உவம உருபால் பின்னர் உவமையணியும்வந்துள்ளமை காண்க. இவ்வாறு வருவனவற்றைக் கலவையணி என்பர் அணிநூலார். “மொழியப்பட்டஅணிபல தம்முள் தழுவ உரைப்பது சங்கீரணமே” (தண்டி). சஞ்சீரண அணி என்பது கலவையணியாம். ‘ஆல்’ அசை. 22 |