2271. | படியொடு திரு நகர் துறந்து, பல் மரம் செடியோடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம் கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப் பிடியொடு நடந்தன - பெருங் கை வேழமே. |
பெருங்கை வேழம்- (சேனையில் உள்ள) பெரிய துதிக்கையையுடைய களிற்று யானைகள்; பிடியொடு - (தம்) பெண் யாணைகளுடனே; படியொடு திருநகர் துறந்து - பூவுலகஆட்சியோடு அழகிய அயோத்தி நகரத்தையும் விட்டு; செடியொடு பல்மரம் தொடர் வனம்நோக்கி - செடிகளோடு பல மரங்கள் ஒன்றை ஒன்று பற்றி நெருங்கியுள்ள காட்டை நோக்கி;சீதை ஆம் கொடியொடு - சீதாபிராட்டி யென்கின்ற கொடியுடனே; நடந்த - நடந்து சென்ற; அக் கொண்டல் ஆம் என - அந்த மேச நிறனாகிய இராமன் போல; நடந்தன - நடந்து சென்றன. யானைக்கு இராமனும், பிடிக்கும் பிராட்டியும் கொள்க. ‘ஏ’ காரம் ஈற்றசை. ‘கொண்டல்’என்பது இராமனுக்கு உருவகம். நிறத்தினால் அன்றிப் பயனாலும் (தன் அடைந்தோர்க்குத் தண்ணளிவிளைத்தலால்) இராமனுக்கு மேகம் நேராகும்‘உருவும் பயனும்’ பற்றிய உருவகம் ஆகும். ‘வேழமுமபிடியும்’, ‘மரமும் செடியும்தொடர் வனம்’ ‘சீதையாம் கொடியொடு நடந்த கொண்டல்’ என்று இவற்றை இணைத்துக் காட்டியது இன்புற வேண்டிய கவிநயம் ஆகும். 28 |