2276. | தாரையும் சங்கமும், தாளம் கொம்பொடு பார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும், பேரியும், இயம்பல சென்ற - பேதைமைப் பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே. |
தாரையும் - தாரை என்ற நீண்ட ஊது கொம்பும்; சங்கமும் -; தாளம் -; கொம்பு - வளைந்த ஊது கருவியும்; பம்பையும் - பம்பை என்னும் பறையும்; துடியும் -; பேரியும் - பெருமுரசும்; மற்றவும் - ஏனைய வாத்தியங்களும்; பார்மிசை - மண்ணின் மேல்; பேதைமைப் பூரியர் குழாத்திடை - அறியாமையுடையபுல்லர்கள் கூட்டத்தின்கண்; அறிஞர் போல - (கற்றுத் துறைபோகிய) நல்லறிவாளர்ஒன்றும் பேசாமல் மௌனமாக இருத்தல் போல; இயம்பல சென்ற - ஒலிக்காமல் சென்றன. தயரதன் இறந்த நிலையிலும், இராமன் வனம் புகுந்துள்ள நிலையிலும் செல்கின்றன வாதலின்மகிழ்ச்சியும் மங்கலமும் உடைய காலங்களில் இயக்கப்படும் இசைக்கருவிகள் இப்போது ஒலியாமல்சென்றன. “புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்”என்றபடி (குறள். 719.) கற்றோர் மற்றோர் அவைக்கண் வாய்திறவார் ஆதலின் அதனையே ‘பூரியர்குழாத்திடை அறிஞர் போல’ என ஒலியாமற் சென்ற வாத்தியங்களின் நிலைக்கு உவமை ஆக்கினார். இனி, முன்னர் (2270) “ஓசையின் நிமிர்த்தது ஒல்லென் பேர் ஒலி” என்பது போல வந்தனபெருங் கூட்டத்தின் புறப்பாட்டால் எழும்பிய ஒலியே அன்றி, இயக்கப்படும் வாத்திய ஒலிஅன்மையான் முரண் ஆகாமை உணர்க. ‘ஏ’ ஈற்றசை. 33 |