2278. | அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன் விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும் கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே. |
அதிர் கடல் - ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற; வையகம் அனைத்தும் - உலகம் முழுவதையும்; காத்தவன் - (நீதி வழுவாது) காப்பாற்றிய தயரதசக்கரவர்த்தியின்; விதிவரு - மரபுவழியில் பாரம்பரியமாக வருகின்ற; தனிக்குடை- ஒப்பற்ற வெண்கொற்றக்குடை; மீது இலா - மேலே பிடிக்கப்படாது உள்ள; படை- அச்சேனை; பொதி பல கவிகை மீன் - நெருங்கிய பலவாகிய (மற்றை மன்னர்களின்) வெண்குடைகளாகிய விண்மீன்கள்; பூத்தது ஆகிலும் - வானம் எங்கும் நிரம்பித்தோன்றின ஆயினும்; கதிர் மதி - ஒளியுடைய சந்திரன்; நீங்கிய கங்குல் - இல்லாத இரவை; போன்றது -. மன்னர்கள் குடைக்குத் தாரகைகளும், சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடைக்குச்சந்திரனும் உவமையாம். விண்மீன்கள் பூத்திருப்பினும் சந்திரன் இல்லாத ஆகாயம்பொலிவழிந்திருத்தல் போல, வெண்குடைகள் பல நடுவே தோன்றினும், சக்கரவர்த்தியின்வெண்கொற்றக் குடை இல்லாமையால் சேனை பொலிவழிந்து தோன்றிய தென்க. விதி - முறைமை.இங்கே மரபு வழியில் சூரிய குலத்தார்க்கு உரியதாய் வருவது. ‘கவிகை மீன்’ உருவகம். ‘ஏ’காரம்ஈற்றசை. 35 |