2280. | தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில, குங்குமம் கொட்டில, கோவை முத்து இல, - பொங்கு இளங் கொங்கைகள் - புதுமை வேறு இல தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய. |
பொங்கு இளங் கொங்கைகள் - (மகளிரது) பருத்துக் கொண்டுள்ள இளமையானதனங்கள்; தங்கு செஞ்சாந்து அகில் கலவை சார்கில - (தம்மிடம் பூசப்பெற்று எப்பொழுதும்) தங்கியிருக்கப்பெற்ற செஞ்சந்தனம், அகில் குழம்பு, கலவைச் சாந்து இவை(இப்போது) சாரப் பெறாமல்; குங்குமம் கொட்டில - குங்குமக் குழம்பு பூசப்பெறாமல்; கோவை முத்து இல - முத்துவடம் அணியாமல்; வேறு புதுமை இல - வேறு புதிய செயற்கை நலன்கள் இல்லாமல் (இருப்பதால்); தெங்கு - தென்னையின்; இளநீர்எனத் தெரிந்த காட்சிய - இளநீர்க் காய்கள் போலத் தோற்றம் உடையவாயின. சாந்து முதலியன அணியாமல் இருக்கிறபடியால், இளநீர்க் காய்களின் தோற்றம் அவ்வாறேபொருந்தியுள்ளது என்று கற்பனை செய்தார். 37 |