2285.‘கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள
தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்’
காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான்
ஆம்’ என, நிகழ்ந்தது - அவ் அளவு இல் சேனையே.

     அவ் அளவு இல் சேனை - அந்த அளவற்ற சேனையானது;
கோமகன் பிரிதலின் -அரச குமாரனாகிய இராமன் நாடு விட்டுக் காடு
சென்றபடியால்;  கோலம் நீத்துள - தன்அலங்காரத்தைத் துறந்துள்ள;
தாமரைச் செல்வியும் - இலக்குமியும்;  தவத்தைமேவினாள் - (தானும்)
தவம் செய்ய விரும்பிச் சென்று விட்டாள்;  காமனும் -மன்மதனும்;
அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம் - (இன்பம் நுகர்வார் எவரும்
இன்மையின் தன்தொழில் இறந்தது  என்று) அரிய துன்பக் கடலில்
மூழ்கிவிட்டானாகும்;  எனநிகழ்ந்தது - என்று சொல்லுமாறு பொலிவும்
மகிழ்ச்சியும் இன்றிச் சென்றது.

     தொழில் செய்தல் மகிழ்ச்சியாம்; தொழில் செய்யாமல் சும்மா இருத்தல்
துன்பமாம்;மன்மதன் தனக்கு வேலையின்மை கருதித் துயர்க்கடலில்
மூழ்கினான் ஆம். ‘ஏ’ காரம்ஈற்றசை.                              42