2287. | அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம் நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த் தலைவனை நிகர்த்தது - அத் தயங்கு தானையே.1 |
அத் தயங்கு தானை - விளங்குகின்ற அந்தச் சேனை; அலை நெடும் புனல் அறக்குடித்தலால் - கடந் நீரை முற்றும் வற்றக் குடித்தலாலும்; அகம் நிலைபெற நிலைநெறிநிறுத்தலால் - பூமி இடம் (ஒரு புறம் சாயாது) நிலைபெறும்படி நிலையான முறையில் நிற்கச் செய்வதாலும்; நெடு மலையினை மண் உற அழுத்தலால் - பெருமலைகளை மண்ணிற் புகும்படிஅழுத்திவிடுதலாலும்; தமிழ்த் தலைவனை - தமிழன் தலைவனாகிய அகத்திய முனிவனை; நிகர்ந்தது - ஒத்துள்ளது. கடலைக் குடித்தல், பூமியைஒருபாற் சாயாது நிறுத்தல், மலையை அழத்தல் மூன்றும்அகத்தியன் செய்த செயல்கள், சேனைகள் கடலைக் குடிக்கின்றன. பூமி எங்கும் இடமின்றிப்பரந்துள்ளபடியால் ஒருபால் சாயாது நிறுத்துகின்றன. மலைகள் மேலேறிச் செல்லும்போது சேனைப்பாரம் தாங்காமல் மலைகள் உள்ளே அழுந்துகின்றன; ஆதலால் மலைகளை அழுத்துகின்றன; எனவே, தமிழ்த் தலைவனை நிகர்த்தது சேனை என்றார். அகத்தியன் தமிழ்த் தலைவன்என்பது தொல்லோர் வழக்கு நோக்கி உணர்க. இந்திரன் பகைவனாகிய விருத்திராசுரன் கடலிற் புக்கு ஒளி்ந்துகொள்ள இந்திரன் முதலிய தேவர்கள் வேண்ட அகத்தியர் அக்கடல் நீரை உழுந்தளவாக்கி அகங்கையில் இட்டுக் குடித்துக் கடலை வற்றச் செய்தனர் என்னும் வரலாற்றைத் திருவிளையாடற் புராணம் இந்திரன் பழிதீர்த்த படலத்துட் கண்டுணர்க(திருவிளை. மதுரைக். இந்திரன்பழி. 49 - 53) மேரு மலையில் பார்வதி தேவியார் திருமணத்தின்போது தேவரெல்லாரும் கூடிச் சேர இருத்தலின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்துவிடச் சிவபெருமான் இதைச் சமப்படுத்தத் தக்கவர் அகத்தியரே என்பது கருதி. அவரைத் தெற்கே அனுப்ப, அவர் வந்து பொதியமலைக்கண் இருத்தலின் பூமி நேராயிற்று என்னும் வரலாற்றையும், அவ்வாறு வருங்கால் இடையில் விந்தியமலை செருக்கடைந்து பிற மலைகளிலும் மேல் உயர்ந்துவிட, தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, தென்திசைவரும் அகத்தியர் விந்தி மலையின் உச்சியில் தம் கையை வைத்து அழுத்த அம்மலை பாதலத் தழுந்தியது என்னும் வரலாற்றையும் கந்த புராணத்தால் அறியலாம். அகம் - பூமி “மனமும் உள்ளும் மனையும் பாவமும், புவியும் மரப்பொதுப் பெயரும் அகமே” என்பது (பிங்கலந்தை.) காண்க. ‘ஏ’ ஈற்றசை. 44 |