2290. | ‘தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை ஏர்கள்தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால் - கார்கள்தாம் என மிகக் கடுத்த கைம்மலை வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே. |
அம் மன்னன் சேனை - (அந்தப் ) பரதன் ஏவிய சேனையில்; கார்கள்தாம் என- மேகங்களே என்று சொல்லும்படி; மிகக் கடுத்த கைம்மலை - மிகவும் பொருந்த அமைந்தயானைகள்; வார்கடாம் அல்லது - பெருகவிடும் மதசலம் அல்லது; ‘தார்கள் தாம், கோதை தாம், தாமம் தாம், ஏர்கள் தாம், கலவை தாம் - தார், கோதை, தாமம், பல்வசைச் சிறப்பான அழகுப்பொருள்கள், கலவைச் சாந்து (இவற்றின்); கமழ்ந்தின்று’ -மணம் வீசப் பெறவில்லை; என்பர் - என்று சொல்லுவர். தார் முதலிய அணியாமையின் அவற்றின் மணம் இல்லை என்றார். தார்- நெடுக ஆடவர்அணியும் மாலை, கோதை - மகளிர் தலையிற் சூடும் மாலை, தாமம் - வட்டமாலை என இவை மாலைவிசேடங்கள். ஒரோவழிப் பொதுப் பெயராகவும் இவை வழங்கும். கடுத்த என்பதை உவமைச் சொல்லாக்குக - கோபித்த யானை என்பதும் ஒன்று. ‘ஏ’ காரம்ஈற்றசை. 47 |