2292. | மத்தளம் முதலிய வயங்கு பல் இயம் ஒத்தன சேறலின், உரை இலாமையின், சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய பத்தியை நிகர்த்தது - அப் படையின் ஈட்டமே. |
அப் படையின் ஈட்டம் -அந்தச் சேனைத் தொகுதி; மத்தளம் முதலிய வயங்கு பல்இயம் - மத்தளம் முதலாகிய விளங்குகின்ற பல வாத்தியங்கள்; உரை இலாமையின் ஒத்தனசேறலின் - ஒலிக்காமல் பொருந்திச் செல்கின்ற படியால் (ஒலியவிந்த படைச்செலவு); நெடுஞ் சுவர்- நீண்ட சுவரில்; சித்திரம் தீட்டிய - சித்திரமாக வரைந்த; சேனைப் பத்தியை நிகர்த்தது - சேனை வரிசையை ஒத்துள்ளது. சேனை வரிசைப் படம் ஒன்று சுவரில் தீட்டப்பெற்றாற்போல ஒலியவிந்த படைவரிசை செல்வதுஉள்ளது என்றார். ஒலிக்காமல் இசைக்கருவிகளைச் சேனை சுமந்து செல்வானேன் என்னில், இராமனை அழைத்து வரும்போது இசைத்தற்கு வேண்டுதலின் இப்போது உடன் கொண்டு சென்றார்என்க. 49 |