பரதன் மரவுரி அணிந்து சத்துருக்கனனுடன் தேரில் சேறல் 2295. | இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும், தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்; பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும், நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான். |
இன்னணம் - இவ்வாறு; நெடும்படை ஏக - பெருஞ்சேனை செல்ல; ஏந்தலும் - பரதனும்; தன்னுடைத் திரு அரை - தன்னுடைய அழகிய இடுப்பிலே; சீரைசாத்தினான் - மரவுரியைத் தரித்து; பின் இளையவனொடும் - பின்னே தொடர்ந்துவரும் தம்பியாய சத்துருக்கனனொடும்; பிறந்த துன்பொடும் - (மனத்துள்) தோன்றியதுக்கத் தோடும்; நல்நெடுந் தேர்மிசை - நல்ல பெரிய தேர்மீது ஏறி; நடத்தல் மேயினான் - (வனத்துக்குச்) செல்லத் தொடங்கினான். ‘திருஅரை சீரை சாத்தினான்’ என்றது இதுகாறும் சிறப்பு மிக்க பொன்னாடைகளை அணிந்தது என அதன் சிறப்பு உணர்த்தற்கு. மேலும் மேலும் பரதனுக்குத் துக்கம் பொங்குதலைப் ‘பிறந்ததுன்பொடும்’ எனக் குறித்தார். 52 |