தாயர் முதலியோர் பரதனுடன் வருதல் 2296. | தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின் ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும், தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப் போயினன் - திரு நகர்ப் புரிசை வாயிலே. |
தாயரும் - (கோசலை, கைகேயி, சுமித்திரை முதலிய) தாய்மார்களும்; அருந்தவத்தவரும் - செய்தற்கரிய தவத்தைச் செய்த முனிவர்களும்; தந்தையின் ஆயமத்திரியரும் - தன் தந்தையாகிய தயரதன் கண் பொருந்திய மந்திரிமார்களும்; அளவுஇல் சுற்றமும் -அளவிட முடியாத பலவாகிய சுற்றத்தார்களும்; தூய அந்தணர்களும் -தூய்மையான வேதியர்களும்; தொடர்ந்து சூழ்வர - தன்னைப் பின்பற்றிச் சுற்றிவர; திருநகர்ப் புரிசை வாயில் போயினன் - அழகிய அயோத்தி நகரத்து மதிலின் (முதன்மையான)வாயிலைச் சென்றடைந்தான். தந்தை போலப் பாராட்டத் தகும் மந்திரியர் என்றும் ஆம். அளவில் சுற்றம் -உறவினர்களையும், அரசச் சுற்றத்தையும் குறிப்பிடும். இராமனை அழைத்து வருதலில்அனைவர்க்கும் உள்ள ஆர்வ மிகுதி இதனால் புலப்படும். ‘ஏ’ காரம் ஈற்றசை. 53 |