2298.‘முன்னையர் முறை கெட
     முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து, என்
     சினத்தைத் தீர்வெனேல்,
“என்னை இன்று என் ஐயன் துறக்கும்”
     என்று அலால்,
“அன்னை” என்று, உணர்ந்திலென்,
     ஐய! நான்’ என்றான்.

     ஐய! - சத்துருக்கனனே!;  ‘முன்னையர் முறைகெட - (நம் குலத்து)
முன்னோர்களின் முறைமை சிதைய;  முடித்த பாவியை - (வரத்தின்
மூலமாகத்) தன் ஆசையைநிறைவேற்றிக் கொண்ட (என் தாயாகிய) பாவியை;
சின்ன பின்னம் செய்து - கண்டதுண்டம் செய்து;  என் சினத்தைத்
தீர்வெனேல் -
என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வேனானால்;  என்
ஐயன் -
என் தலைவனாகிய இராமன்;  இன்று என்னைத் துறக்கும்-
இன்றே என்னைத் தம்பியல்லன் என்று துறந்துவிடுவான்;  என்று அலால் -
என்றுகருதி அதனால் அமைதியாக இருந்தேனே அல்லாமல்; (இவளை)
‘அன்னை’ என்று நான் உணர்ந்திலென்- ‘தாய்’ என்று கருதி நான்
அமைதியாக இருந்தேனில்லை;  என்றான் -.

     “ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,  தாய் எனும் பெயர்
எனைத் தடுக்கற் பாலதோ”என்ற பரதன் கூற்றை (2173) இங்கு ஒப்பிடுக.
கூனியைப் போலன்றித் தன்தாய் கைகேயி,  நடந்தஅவலங்களுக்கு நேரடிக்
காரணம் ஆகவும் அவளைக் கொல்லாது  இதுகாறும் நின்றது  இராமன்
மனத்துக்குஉவப்பாய் இராது  அச்செயல் என்பதனாலேயே ஆம் என்றான்
பரதன்.                                                      55