பரதன் இராமன் தங்கிய சோலையில் தங்குதல்  

2300. மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட,
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான்.

     மொய் பெருஞ் சேனையும் - நெருங்கிய பெரிய சேனையும்;  மூரி
ஞாலமும் -
பெருமை பொருந்திய அயோத்தி மக்களும்;  கைகலந்து -
ஒன்று திரண்டு; அயல் ஒருகடலின் சுற்றிட - பரதனின் பக்கல் ஒரு கடல்
போலச் சுற்றியிருப்ப;  ஐயனும் தேவியும்இளைய ஆளியும் வைகிய
சோலையில் -
இராமனும்,  சீதையும்,  இளைய யாளிபோல்வானாகிய
இலக்குவனும் தங்கியிருந்த அந்தச் சோலையிலேயே;  தானும் - (பரதன்)
தானும்;  வைகினான் - (அன்று) தங்கினான்.

     பரதன் இராமன் முதலில் தங்கியிருந்த சோலையில் தங்கினன் -
அன்பு கலந்துறவு கொண்டநெஞ்சம் உடையவர்களுக்குப் பயின்ற
பொருள்களைக் கண்ட வழி பயின்றாரையே கண்டாற் போலும்ஆதலின்
இராமன் தங்கிய சோலை  பரதனுக்குத் துயராற்றும் மருந்தாயிற்று. ஆளி -
உவமையாகுபெயர்.                                             57