கங்கைக் கரை அடைந்த சேனையின் சிறப்பும் மிகுதியும்  

2304.எண்ண அருஞ் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது,
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெங் கரி மதத்து அருவி பாய்தலால்,
உண்ணவும், குடையவும், உரித்து அன்று ஆயதே.

     கண் அகன் - இடம் அகன்ற; பெரும் புனல் - மிக்க நீரை உடைய;
கங்கை - கங்கையாறு; அண்ணல் - பெருமையுடைய; வெங்கரி - கொடிய
யானைகளின்; மதத்து அருவி - மத நீர்ப் பெருக்காகிய அருவி; எங்கணும்
பாய்தலால்
- எல்லா இடங்களிலும் பாயப் பெறுதலால்; எண்ண அரும்
சுரும்பு தம் இனத்துக்கல்லது
- கணக்கிட முடியாத வண்டுக்
கூட்டங்களுக்கெல்லாமல் (ஏனைய உயிர்களுக்கு); உண்ணவும் - குடிக்கவும்;
குடையவும் - குளித்து மூழ்கவும்; உரித்தன்று ஆயது -
உரிமையுடையதல்லாததாக ஆயிற்று.

     கங்கை நீரினும் யானைகளின் மதநீர்ப் பெருக்கு மிகுதி என்றதாம்.
எனவே, யானைகளின்மிகுதி கூறியவாறு.  வண்டுகள் மதநீரிற் படிந்து
குடைந்து உண்ணும் இயல்பின ஆதலின் அவற்றுக்குஇப்போது கங்கை நீர்
உரியதாயிற்று. மதம் பிடித்த யானையின் உடல் வெப்பம் அதிகமாகஇருக்கும்
ஆதலின், வெம்மையுடைய கரி என்றும் பொருள்படும். ‘ஏ’ காரம்ஈற்றசை. 2