2306.பாலை ஏய் நிறத்தொடு, பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங் கடல், ஓடிற்று இல்லையால்;-
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையை மடுத்தது, அக் கங்கை வெள்ளமே.

     அக் கங்கை வெள்ளம் - அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு;
பாலை ஏய்நிறத்தொடு - பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான்
பண்டு படர் -
தான் முன்புசென்று சேர்கின்ற; ஓலை ஏய் நெடுங்கடல்-
ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; ஓடிற்று  இல்லை - சென்று
கலந்தது இல்லை; (ஏன் எனில்) மாலை ஏய் நெடுமுடி -பூமாலை
பொருந்திய நீண்ட மகுடத்தை உடைய;  மன்னன் சேனை ஆம்
வேலையே
- பரதனது சேனையாகிய கடலே; மடுத்தது - உண்டு விட்டது.

     பரதனது  சேனைக்கடல்வழிவந்த இளைப்பினால் கங்கை நீரைப்
பருகிய படியால் கங்கையில் நீரே இல்லையாகிவிட்டது; எனவே,  கடலில்
கங்கை கலக்கவில்லை எனஉயர்வு நவிற்சியாகக் கூறிச் சேனை மிகுதியைக்
காட்டினார். ‘ஓல்’-ஒலி மிகுதி. “பாலை ஏய்நிறத்தொடு....ஓடிற்றில்லை” என
உரைத்து மதநீர்ப் பெருக்கு்க் கலந்தலாலும்,  சேனை மிகுதிஉழக்கலாலும்
கங்கையின் கங்கையின் வெண்ணிறம் மாறிக் கடலில் கலந்தது என்பாருளர்.
பின்னர்ச் சேனையாம் வேலையே மடுத்தது என வருதலின் அது ஒவ்வாமை
அறிக. கடலினும் சேனைமிகுதி என்பதுகூறியதாம், யானை, குதிரை மிகுதி
கூறினார்; இப்பாடலால் காலாட்படையின் மிகுதி கூறினார் என்றலும் ஒன்று.
‘ஆல்’, ‘ஏ’ அசைகள்.                                         4