2311. | கட்டிய கரிகையன், கடித்த வாயினன், வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன், கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன், ‘கிட்டியது அமர்’ எனக் கிளரும் தோளினான். |
கட்டிய - (இடைக்கச்சில்) கட்டப்பெற்றுள்ள; கரிகையன் - உடையவாளை உடையவன்; கடித்த வாயினன் - (பற்களால்) உதட்டைக் கடித்துக் கொண்டிருப்பவன்; வெட்டிய மொழியினன்- கடுமையாகப் பேசும் சொற்களை உடையவன்; விழிக்கும் தீயினன்- (கண்கள்) விழித்துப் பார்க்கும் நெருப்புத் தன்மை உடையவன்; கொட்டிய துடியினன் - அடிக்கப் பெரும் உடுக்கையை உடையவன்; குறிக்கும் கொம்பினன் - (போர்) குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; ‘அமர் கிட்டியது’ - ‘போர் அருகில்வந்துவிட்டது;’ எனக் கிளரும் தோளினான்- என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும்தோள்களை உடையவன் (ஆகி..) (வரும் பாடலில் முடியும்). உதட்டைப் பற்களால் கடித்தலும், உரத்த சத்தமிட்டுக் கடுமையாகப் பேசுதலும், கண்கள்கனல் சிந்தச் சிவந்து பார்த்தலும் கோபத்தின் மெய்ப்பாடுகளாம். போர் கிடைத்தால்வீரர்களாயிருப்பார் மகிழ்தல் இயல்பு. ‘கிட்டியது அமர்’ என்றதால் குகனது தோள்கள்கிளர்ச்சியுற்றன எனற்ார். “போரெனில் புகலும் புனைகழல் மறவர்” (புறம் 31) என்பதும் காண்க. துடியும், கொம்பும் போர்க்காலத்து வீரர்களுக்கு உற்சாகமூட்ட எழுப்பப்படும்வாத்தியங்களாகும். எனவே, இப்பாடலால் குகன் போருக்குச் சித்தமானான் என்பதைக்கூறினார். 9 |