2313. | மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் - ஒருங்கு அடைநெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு அருங் கடையுகம்தனில், அசனி மா மழை கருங் கடல் கிளர்ந்தெனக் கலந்து சூழவே, |
ஒருங்கு அடை நெடும் படை - ஒன்று சேர்ந்து வந்த பெரிய (வேட்டுவச்) சேனை; அருங் கடை உகம்தனில் - அரிய கடையூழிக் கூாலத்தில்; அசனி மா மழை - இடியோடுகூடிய மேகமும்; கருங்கடல் - கரிய கடலும்; கிளர்ந்து என - (ஒலித்து) மிக்குஎழுந்தார் போல; கலந்து சூழ - ஒன்று சேர்ந்து தன்னைச் சுற்றிவர; மருங்கு அடை- பக்கத்தில் உள்ள; தென்கரை - (கங்கையாற்றின்) தெற்குக் கரையில்; வந்து தோன்றினான் - (குகன் என முடிக்க) படைகளின் மிகுதியும், ஆரவாரம்சூழ்தலும் பற்றி ஊழிக்காலத்து இடிமேகமும், பொங்குங்கடலும் சேர்ந்தது போல என்று உவமை கூறினார். வந்து சேர்ந்தான் என்னாது ‘தோன்றினான்’என்றது, பரதனும் அவன் சேனையில் உள்ளாரும், பிறரும் தனது பேராற்றலும் வீராவேசமும் காணும்படி வந்தடைந்தான் என்பதுபற்றி. வடகரையில் பரதனும், தென்கரையில் குகனும் நின்றார் ஆதலின்‘தோன்றினான்’ என்றார் எனலும் ஆம். ‘ஏ’காரம் ஈற்றசை. 11 |