2315. | ‘துடி எறி; நெறிகளும், துறையும், சுற்றுற ஓடியெறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்; கடி எறி கங்கையின் கரை வந்தோர்களைப் பிடி; எறி, பட’ எனா, பெயர்த்தும் கூறுவான். |
‘துடிஎறி - போர்ப் பறைகளை அடியுங்கள்; நெறிகளும்துறையும்- வருவதற்குரிய வழிகளையும் (தென்கரையில்) ஏறுதற்குரிய துறைகளையும்; ஓடியெறி - அழித்துநீக்கி, இல்லாமல் செய்யுங்கள்; அம்பிகள்யாதும் ஒட்டலிர் - தோணிகளுள்ஒன்றையும் (கங்கையில்) ஓட்டாதீர்கள்; கடிஎறி கங்கையின் - விரைந்து அலைவீசிவருகின்ற கங்கையாற்றின்; கரை வந்தோர்களை - தென்கரைக்கு (தரமாக முயன்று)வந்தவர்களை; பிடி- பிடியுங்கள்; பட எறி’ - இறக்கும்படிஅழியுங்கள்; எனா - என்று (குகன்) கூறி; பெயர்த்தும் - மேலும்; கூறுவான்- சில வீரவார்த்தைகளையும் சொல்லுவான் ஆனான். ‘துடி’ என்பது ஈண்டுப் போர்ப்பறைகளுக்கு உபலக்கணம். துடியொன்று கூறவே மற்றப் பறைகளும் கொள்ளப்பட்டன. பரதனது சேனை இராமன்மேல் படையெடுத்து வந்துள்ளதாகக் குகன் கருதினான் ஆதலின், அச்சேனை தென்கரை அடையாதபடி எச்சரிக்கையாகத் தன் சேனைகளுக்குக் கட்டளை இடுகிறான் என்க. மேலும், அச் சேனை வீரர்கள் உற்சாகம் அடைவதற்காகச் சில வார்த்தைகள் மேல் கூறுகிறான். ‘கடி எறி’ காவலாக வை என்றுரைப்பதும் உண்டு; அது பிடி என்பதற்குப் பின் உரைப்பின் பொருந்தும். ‘தோணிகள் ஓட்டாதீர்’ என்றான் ஆதலின் ‘விரைந்து அலைவீசி ஓடும்’ கங்கையில் தோணிகள் உதவியின்றித் தென்கரை அடைதல் இயலாது என்பதைப் பின்னர்க் கூறினான். அதனையும் மீறித் தம் ஆற்றலால் வருவாரைப் ‘பிடி’, ‘பட எறி’ என்பது அதன்பின் கூறப்பட்டது. குகனது ஆற்றொழுக்கான சிந்தனை யோட்டத்தை இப்பாடல் சுட்டிச் செல்கிற அழகு காண்க. ‘எறி’, ‘பிடி’ என வீரரைத் தனித்தனி நோக்கி ஒருமையிலும், ‘ஓட்டலிர்’ எனக் கூட்டமாக பார்த்துப் பன்மையிலும் கூறினான் என்க. இனி ஒருமை பன்மை மயக்கம் எனினும் அமையும். 13 |