குகன் தன் சேனைகளுக்குக் கூறிய வீர வார்த்தை கலித்துறை 2316. | ‘அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர் நாயகன், ஆளாமே, வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே! செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ? உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்” என்று, எனை ஓதாரோ? |
‘என் ஆருயிர் நாயகன் - என் அரிய உயிர்த் துணைவனாகிய; அஞ்சனவண்ணன்- மை போலும் கரிய நிறமான திருமேனி அழகனாகிய இராமபிரான்; அரசு ஆளாமே - ஆட்சிஉரிமை எய்தாதபடி; வஞ்சனையால் - சூழ்ச்சியால்; எய்திய -(அவ்வரசாட்சியைக் கைப்பற்றி) அடைந்த; மன்னரும் - அரசரும் (பரதரும்); வந்தாரே - (இதோ என்னருகில்) வந்துள்ளார்கள் அன்றோ!; தீ உமிழ்கின்றனசெஞ்சரம் - நெருப்பைக் கக்குகின்றனவான (என்) சிவந்த அம்புகள்; செல்லாவோ - (இவர்கள் மேற்) செல்லாமல் போய்விடுமோ?-; இவர் உஞ்சு போய்விடின்- இவர்கள்(என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும் இடத்துக்குப்) போய்விட்டால்; ‘நாய்க்குகன்’ என்று - (உலகோர்) குகன் றாய் போன்ற கீழ்த்தன்மை உடையவன் என்று; எனை - என்னைப் பற்றி; ஓதாரோ’ - சொல்லாமல் இருப்பார்களா? (தொடரும்) இவன் ஈடுபட்டது அவன் திருமேனி அழகில் ஆதலின், அது தனக்கும் அவனுக்கும் ஒன்றாயிருத்தலின் ‘அஞ்சன வண்ணன்’ என்று இது மேலிட்டு வந்தது என்க. இராமன் பெற வேண்டிய அரசைப் பரதன் பெற்றது பற்றியது சீற்றம் என்பதைத் தெரிவித்தான். ‘நாய்’ என்பது ஒருவரைக் கீழ்மைப்படுத்திப் பேசுதற்குப் பயன்படுவது ஆதலின் இங்கே ‘நாய்க்குகன்’ என்று உலகம் தன்னை இழித்துப் பேசும் என்றான். பரதன் படைகளைப் போகவிடில் இராமன்பால் காட்டும் நன்றியுணர்வுக்கு மாறானது; அச்செயலைச் செய்யும் குகனுக்கு நன்றியுணர்வி்ல் சிறந்த நாயைக் கூறலாமோ எனின், அற்றன்று, நாய் நன்றியுணர்விற் சிறந்ததாயினும் தன் வீட்டுக்குடையவன்பால் காட்டும் நன்றியுணர்வைத் தன் வீட்டில் திருட வரும் திருடன் தனக்கோர் உணவு கொடுத்த வழி அவன்பாலும் நன்றி காட்டிக் குரைக்காது ஒரோவழி இருந்துவிடல் பற்றி அதன் நன்றியுணர்வும் சிறப்பின்மை கண்டு உலகம் அதனைக் கீழ்மைப்படுத்திக் கூறுதல் தெளிவாம். ‘குகன் நாய்’ என்று சொல்வதினும் ‘நாய்க் குகன்’ எனல் மேலும் இளிவரலாம். உரையினும் ‘பாவத்துக்கே’ கம்பர் இது போன்ற இடங்களில் முதன்மை தருதல் வெள்ளிடை. ஏகார, ஓகாரங்கள் ஐய, வினாப் பொருளில் வந்துள்ளன. ‘மன்னர்’ என்பது இகழ்ச்சிக் குறிப்பு. உயர்சொல்தானே குறிப்பு நிலையால் இழிபு விளக்கிற்று (தொல். சொல். சிளவி. சேனா.27). 14 |