2320. ‘அருந் தவம் என் துணை ஆள,
     இவன் புவி ஆள்வானோ?
மருந்து எனின் அன்று உயிர்?
     வண் புகழ் கொண்டு, பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை
     உகந்தவர்தம்மொடு போகாதே
இருந்தது நன்று; கழிக்குவென்,
     என் கடன் இன்றோடே.

     என் துணை - எனக்கு நண்பனாகிய இராமன்; அருந் தவம் ஆள-
அரியதவத்தைச் செய்துகொண்டிருக்க;  இவன் - இந்தப் பரதன்;  புவி
ஆள்வானோ?
-உலகத்தை ஆட்சி செய்வானோ? (அதையும்
பார்த்துவிடுவோம்); உயிர் -  என்னுடையஉயிர்; மருந்து  எனின் -
(கிடைத்தற்கரிய) தேவர் அமுதமோ என்றால்;  அன்று -அல்ல (நான்
அப்படி அதை அரிதாக எண்ணிப் பாதுகாக்க நினைக்க வில்லை);
வண்புகழ்கொண்டு- (இராமனுக்காகப் பரதனை எதிர்த்து) அதனால் சிறந்த
புகழைப் பெற்று; பின் மாயேனோ- அதன் பிறகு உயிர் துறக்க
மாட்டேனோ?;  பொருந்திய கேண்மை - மிகவும் ஒட்டியஉறவை;
உகந்தவர் தம்மொடு - என்பால் கொண்டு மகிழ்ந்த இராம
இலக்குவர்களோடு; போகாதே - உடன் செல்லாமல்; இருந்தது நன்று -
(நான்) இங்கேயே தங்கியது நல்லதாய்ப் போயிற்று; என்கடன் - (நான்)
இராமனுக்குச் செய்ய வேண்டிய கடமையை; இன்றோடு கழிக்குவென் -
இன்றைக்கே செய்து முடிப்பேன்.

     என் துணை - என் அண்ணன் எனலும் ஆகும். ‘முன்பு உளெம், ஒரு
நால்வேம்; முடிவு உளது என உன்னா, அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளெர் ஆனோம்” (1995) என்பது கொண்டு இராமன் குகன்
அண்ணன் தம்பி முறையாதல் அறியலாம் . ‘உயிர் மருந்து எனின் அன்று’
என்பதற்கு, “மருந்தோ மற்று ஊன் ஒம்பும் வாழ்க்கை, பெருந்தகைமை, பீடு
அழிய வந்த இடத்து” (குறள் 968) என்பது பற்றி உரை காண்க. மருந்து -
உயிரைக் காப்பாற்றி நிறுத்தவல்ல சஞ்சீவினி போன்ற மருந்தும் ஆகும்.
‘நன்று’ என்பதற்கு ‘நன்றாயிருந்தது’ எனத் தன்னிகழ்ச்சியாகப் பொருள் கூறி,
நான் அவர்களுடனேயே போயிருக்க வேண்டும், போகாமல் தங்கியது நன்று
என்று கூறுதல் உண்டு. அப்பொருள் இங்கு ஏற்குமேல் கொள்க.
இராமனுக்குப் பகைவராய் உள்ளாரை அழித்தலைப் தன் கடமை செய்தலாகக்
குகன் கருதினன் என்க. ‘ஏ’காரம் ஈற்றசை.                          18