2321. ‘தும்பியும் மாவும் மிடைந்த
     பெரும் படை சூழ்வு ஆரும்,
வம்பு இயல் தார் இவர்
     வாள் வலி கங்கை கடந்து அன்றோ?
வெம்பிய வேடர் உளீர்!
     துறை ஓடம் விலக்கீரோ?
நம்பி முன்னே, இனி நாம்
     உயிர் மாய்வது நன்று அன்றோ?

     தும்பியும் - யானைகளும்;  மாவும் - குதிரைகளும்;  மிடைந்த -
நெருங்கிய; பெரும்படை - பெரிய சேனையால்;  சூழ்வு ஆரும் -
சுற்றப்படுதல்பொருந்திய;  வம்பு இயல் தார் இவர் - மணம் வீசுகின்ற
மாலையணிந்துள்ள இவர்கள்; வாள்வலி - படையின் ஆற்றல்;  கங்கை
கடந்து அன்றோ -
இக் கங்கையாற்றைக்கடந்து  போன பிறகு அல்லவா
(காட்டமுடியும்?);  வெம்பிய வேடர் உளீர்! - (இவர்களைக்கண்டு) மனப்
புழுக்கம் அடைந்துள்ள வேடர்களாய் உள்ளவர்களே!; துறை ஓடம்
விலக்கீரோ
- நீர்த்துறையிலே இவர்களுக்கு ஓடம் விடுவதை
நிறுத்திவிடுங்கள். (ஒருவேளை இவர் நம்மைத்தடுத்து மேற்செல்லும்
ஆற்றல் உடையவராயினும் இவரோடு போரிட்டு);  நம்பி முன்னே -
இராமபிரானுக்கு முன்னாலேயே;  நம் உயிர் மாய்வது - நமது உயிர்
அழிந்து போவது; இனி நன்று அன்றோ? - இனிமேல் நல்லது அல்லவா?

     “ஆழ நெடுந்திரை ஆறு கடந்து  இவர் போவாரோ”, “இவ் எல்லை
கடந்து  அன்றோ”, “சேனையும்ஆர் உயிரும் கொடு போய் அன்றோ”
என்பதனை ஒப்புக் காண்க. மணம் வீசும் மாலையைப்பரதனுக்குக்
குகன்தானே இட்டான் எனக் கொள்க; அவன் படை எடுத்து  வந்தான் என
நினைத்தலின், தந்தை இறந்ததோடு தமையன் காடு செல்லவும் தான்
காரணமாக இருத்தலின் பழிசுமந்தேன் என்று காடுநோக்கிக் கண்ணீரோடு
வருகின்ற பரதன்,  மணம் வீசும் மாலை அணிந்து  வந்தான் என்றல்
பொருந்தாதாதலின்,  ‘நீங்கள் ஓடம் ஓட்டாவிடினும் அவர்களே ஓடத்தைப்
பயன்படுத்தி அக்கரைசெல்லக்கூடும். ஆதலின், கங்கையில் ஓடங்களை
அப்புறப்படுத்துங்கள்’ என்று தன் சேனைவீரர்களுக்குக் குகன் கட்டளை
இட்டான். போரில் வெற்றி தோல்வி உறுதி அல்ல ஆதலின், ‘நம்பி முன்னே
இனி நம் உயிர் மாய்வது நன்று’ என்றானாம். ‘ஓ’காரம் வினாப் பொருட்டு. 19