2322. | ‘போன படைத் தலை வீரர்தமக்கு இரை போதா இச் சேனை கிடக்கிடு; தேவர் வரின், சிலை மா மேகம் சோனை பட, குடர் சூறை பட, சுடர் வாளொடும் தானை பட, தன் யானை பட, திரள் சாயேனோ? |
போன - (நம்முடன்) வந்துள்ள; படைத்தலை வீரர் தமக்கு - சேனையின்கண் உள்ள வீரர்களுக்கு; இரை போதா - (ஒருவேளைப்) போர்க்கும் பற்றாத; இச்சேனை - இந்தப் (பரதனது) சேனை; கிடக்கிடு- கிடக்கட்டும்; தேவர்வரின்- தேவர்களே (படையெடுத்து) வந்தாலும்; சிலை மா மேகம் - என் வில்லாகியகரிய மேகம்; சோனை பட - அம்பு மழையைச் சொரிய; குடர் சூறைபட -எதிரிகளது குடர்கள் சிதைந்து அலைய; தானை சுடர்வாளோடும் பட - எதிரிச் சேனைகள்தம்கையிற் பிடித்த படைக்கலங்களோடும் இறக்க; தனி யானை பட - ஒப்பற்ற யானைகள்அழிய; திரள் சாயேனோ - (அப்படைக்) கூட்டத்தை நிலைகுலைக்காமல் விடுவேனோ? இரை என்பது உணவு. இங்கே வீரர்களுக்கு உணவாவது போர் ஆதலின், ‘ஒருவேலைப் போர்’ எனப்பொருள் உரைத்தாம். ‘போன படைத்தலை வீரர்’ இராம இலக்குவனர் என்றலும் ஒன்று. நம்மைத்தப்பிச் சென்றாலும் இராம இலக்குவர்களோடு இரை போதா இச்சேனை என்றானாம். ‘தேவர் வரின்’- வரினும் என்ற சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. ‘ஓ’ வினாப்பொருட்டு. 20 |