2323. | ‘நின்ற கொடைக் கை என் அன்பன் உடுக்க நெடுஞ் சீரை அன்று கொடுத்தவன் மைந்தர் பலத்தை, என் அம்பாலே கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை கொண்டு ஓடி, துன்று திரைக் கடல், கங்கை மடுத்து இடை தூராதோ? |
அன்று- (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற கை - (முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச் செய்து) நின்ற திருக்கரங்களை உடைய;என் அன்பன்-என் அன்பிற்குரிய இராமன்; நெடுஞ் சீரை உடுக்க - பெரியமரவுரியைஉடுக்குமாறு; கொடுத்தவள் - (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்; மைந்தர் பலத்தை - மகனார் ஆன பரதன் சேனையை; என்அம்பால் கொன்று குவித்த - என்னுடையஅம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள் பிணக்குவை - கொழுப்பு மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை; கங்கை - இந்தக் கங்கா நதி; கொண்டுஓடி - இழுத்துக் கொண்டு விரைந்து சென்று; துன்று திரைக்கடல் - நெருங்கியஅலைகளை உடைய கடலில்; மடுத்து - அவற்றைச் சேர்த்து;இடை தூராதோ?- அக்கடல் இடத்தைத் தூர்த்து விடாதோ? (தூர்த்துவிடும்) ‘நின்ற கொடைக் கை’ என்பதற்கு என்றும் வள்ளலாக நின்ற எனவும் பொருள் உரைக்கலாம்.சீரை - மரவுரி. அதன் பொல்லாங்கு கருதி நெடுஞ் சீரை என்றான். குகன் தன் ஆற்றாமையால்.‘மைந்தா’ என்றது பரத சத்துருக் கனர்களையும் ஆம். சத்துருக்கனன் கைகேயியின் மகனல்லன்ஆயினும் பரதன் துணையாதலின் ‘மைந்தர்’ என ஒன்றாக்கிக் குறித்தான் குகன் எனல் அமையும்என்க. ‘பலம்’ என்றது சேனையை. 21 |