சுமந்திரன் குகனைப்பற்றிப் பரதனுக்கு விளக்குதல்  

2327.‘கங்கை இரு கரை உடையான்;
     கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு
     உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்;
     வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க்
     குகன் என்னும் குறி உடையான்.

     ‘கங்கை- கங்கையாற்றின்;  இருகரை - இரண்டு கரைப்பகுதியில்
உள்ளநிலங்களையும்; உடையான் - தனக்குச்சொந்தமாக உடையவன்;
கணக்கு  இறந்த -அளவில்லாத;  நாவாயான்- படகுகளை உடையவன்;
உங்கள் குலத் தனி நாதற்கு -உங்கள் சூரியவம்சத்தில் திருவவதாரம்
செய்தருளிய ஒப்பற்ற தலைவனான இராமனுக்கு;  உயிர்த்துணைவன் -
ஆத்ம நண்பன்;  உணர் தோளான் - உயர்ந்ததோள்களைஉடையவன்;
வெங்கரியின் ஏறு அனையான் - (மதம் பிடித்த)கொடிய ஆண்
யானையைஒத்தவன்; வில் பிடித்த
வேலையினான்-வில்லைக் கையில்
பிடித்துக் கொண்டுள்ள (வேட்டுவவீரராகிய) சேனைக் கடலை உடையவன்;
கொங்கு அலரும் நறுந் தண்தார்- மணம் வீசித்தேன் பிலிற்றும்
குளிர்ந்த மாலையைஅணிந்துள்ள; குகன் என்னும் குறி உடையான்-
குகன் என்கின்ற பெயரை உடையவன்;’ (அடுத்த பாட்டில் முடியும்)

     இராமனைக் காணும் விரைவில் நிற்கின்ற பரதனுக்கு முதலில்
தேவைப்படுவது கங்கையைக் கடந்து அக்கரை செல்வதே ஆதலால் எடுத்த
எடுப்பில் “கங்கை இரு கரை உடையான், கணக்கு இறந்த நாவாயான்”
என்று அவற்றை முதலிற் கூறினான். இராமன்பால் அன்புடையார் எல்லாம்
பரதனால் அன்பு செய்யப்படுவார் ஆதலின் ‘தனி நாதற்கு உயிர்த்
துணைவன்’ என்று அதனை அடுத்துக் கூறி, நின் அன்புக்குப் பெரிதும்
உகந்தவன், இராமனை மீண்டும் அழைத்து வரும் உனது குறிக்கோளைக்
கங்கையைக் கடத்திவிடுவதோடு அன்றித் தொடர்ந்து வந்தும்
முடிக்கவல்லவன் என்பது தோன்றக் கூறினான். அடுத்து, குகனது
பேராற்றலும், அவன் படைப்பெருமையும், அவனது பெயரும் கூறுகிறான்.
‘தேர்வலான்’ ஆகிய சுமந்திரன் மதியமைச்சனும் ஆதலின் சொல்வன்மை
விளங்கப் பேசினன் எனலாம். இங்கும் இராம நண்பன் என்கின்ற
காரணத்தால் குகனுக்குத் தேர்வலான் ‘கொங்கலரும் நறுந் தண் தாரை’
அணிவித்தான் என்க. இனி, இத் தேர்வலான் ஆகிய சுமந்திரன் மந்திரி
என்பதனை ‘மந்திரி சுமந்திரனை’ (1856) என்பதால் அறிக. குகன்
இராமனோடு நட்புக் கோடற்கு மிக முன்னரே இராமனைக் கானகத்தே
விட்டுச் சென்ற சுமந்திரன் ‘உங்கள் குலத்தனிநாதற் குயிர்த்துணைவன்’
என்று பரதன்பால் கூறியது எப்படி என்னும் வினா எழுதல் இயல்பே.
அமைச்சராவார் அனைத்தையும் உணர்தல் வேண்டும் ஆதலின் இராமனது
பயணவழியில் கங்கையைக் கடக்கின்றவரை நிகழ்ந்த நிகழ்ச்சி களையும்
அவன் முன்னரே அறிந்திருத்தலில் வியப்பு இல்லை என அறிக. வான்
மீகம். ‘குகனோடு சுமந்திரன் சிலநாள் உடனிருந்து பிறகே வெறுந்தேருடன்
மீண்டான்’ என்று கூறுதல் காண்க.                                25