குகனைக் காணப் பரதன் கங்கையின் வடகரை அருகில் விரைதல் 2329. | தன் முன்னே, அவன் தன்மை, தந்தை துணை முந்து உரைத்த சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலாத் திரு மனத்தான், ‘மன் முன்னே தழீஇக் கொண்ட மனக்கு இனிய துணைவனேல், என் முன்னே அவற் காண்பென், யானே சென்று’ என எழுந்தான். |
தன்முன்னே - தன் எதிரில்; அவன் தன்மை - அந்தக் குகனது நல்லியல்புகளை; தந்தை துணை - தன் தந்தையாகிய தயரதனின் நண்பனான சுமந்திரன்; முந்து உரைத்த - முற்பட்டுச் சொல்லிய; சொல்முன்னே - சொல்லுக்கும் முன்பாக;உவக்கின்ற - மகிழ்ச்சி அடைகின்ற; துரிசு இலாத் திரு மனத்தான் - குற்றம்சிறிதும் இல்லாத நல்ல மனத்தை உடையவனாகிய பரதன்; ‘மன் முன்னே தழீஇக் கொண்ட -நம் அரசனாகிய இராமன் வனம் புகுந்த முன்னமே (அன்பு செய்து) தழுவிக் கொண்டுள்ள; மனக்குஇனிய துணைவனேல் - அவன் மனத்துக்கு இனிய துணைவன் ஆனால்; என் முன்னே - என்னை(அவன் வந்து பார்ப்பதற்கு) முன்னமே; யானே சென்று அவற் காண்பென்’ - நானே(முற்பட்டு) சென்று அவனைக் காணுவேன்;’ என - என்று சொல்லி; எழுந்தான் -புறப்பட்டான். இராமன்பால் அன்புடையான் குகன் ஆதலின் அவனை முற்பட்டுச் சென்று காணப் பரதன்விரைந்தான். ‘இராமன் அன்பினால் குகனைத் துணைவனாகத் தழுவிக்கொண்டான்’ என்ற சொல் செவிப்படும் முன்னமேயே பரதனது உள்ளம் உவகையால் நிறைந்தது என்பது பரதன் இராமன்பால் கொண்ட பேரன்பை எடுத்துக்காட்டும். பாகவதர்களாய் உள்ளார் ஒருவர் ஒருவரினும் முற்படுதல் இயல்பு. ‘என் முன்னே’ என்பதற்கு, அந்தக் குகன் இராமனால் தழுவிக் கொள்ளப்பெற்ற துணைவனேல் என்னுடைய முன் பிறந்த தமையனே ஆவான் எனப் பொருள்படுதல் இங்கு மிகவும் பொருந்தும். தமையனைத் தம்பி சென்று காணுதல் பொருந்தும் அன்றித் தம்பியைத் தமையன் வந்து பார்த்தல் பொருந்தாது ஆதலின் யானே சென்று காண்பன் என்றானாம். ‘என் முன்னே’ என்று குகன் பரதனின் தமையன் ஆதலை, ‘இன் துணைவன் இராகவனுக்கும்; இலக்குவற்கும், இளையவற்கும், எனக்கும் மூத்தான்’ (2367) என்று கோசலா தேவியிடத்துக் குகனைப் பரதன் அறிமுகப்படுத்தியவாற்றான் அறிக. சுமந்திரன் தயரதனது மந்திரி ஆதலின் ‘தந்தை துணை’ ஆயினன். பின்னர்ப் பரதன் “எந்தை இத்தானை தன்னை ஏற்றுதி” (2349) என அவனைத் தந்தையாகவே கூறுமாறும் இதனால் அறிக. பரதன்மாட்டுக் குகன் ‘துரிசு’ நினைத்தான் ஆதலின், அக்குறிப்புப் பொருள் பற்றித் ‘துரிசு இலாத் திரு மனத்தான்’ என்றது இங்கு மிகவும் பொருந்தும். 27 |