2332. | ‘நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலைநின்றான்; துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்; எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?’ என்றான். |
‘நம்பியும் - ஆடவரிற் சிறந்த இப்பரதனும்; என் நாயகனை - என் தலைவனாகியஇராமனை; ஒக்கின்றான் - ஒத்திருக்கிறான்; அயல் நின்றான் - அருகில்இருக்கின்றவன் (ஆகிய சத்துருக்கனன்); தம்பியையும் ஒக்கின்றான் - இராமனது உடன்பிரியாத் தம்பியாகிய இலக்குவனை ஒத்திருக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான் - (இப்பரதன்) தவத்துக்குரிய வேடத்தை மேற்கொண்டுள்ளான்; துன்பம் ஒரு முடிவு இல்லை -(இப் பரதன்) படுகிற துன்பத்துக்கோ ஓர் அளவே இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்- இராமன் சென்ற திசையாகிய தென்திசையைப் பார்த்து அவ்வப்போது வணங்குகிறான்; (இவற்றால்இவன் துயர்நிலை விளங்குதலின்) எம்பெருமான் - எம்கடவுளாகிய இராமனுக்கு; பின்பிறந்தார் - தம்பிகள்; பிழைப்பு இழைப்பரோ’ - (தவறு செய்வார்களா)’தவறு செய்வர் என்று நான் எண்ணியது பெரும் தவறு); என்றான் - என்று நினைத்தான். பரத சத்துருக்கனர்கள் இராம இலக்குவர்களைப் போன்றனர் என்றான். தவ வேடமும் அவ்வாறேஒத்தது. துயர்நிலை இராமனுக்கு இல்லாதது. இராமனைப் பிரிந்ததனால் பரதனுக்கு உளதாயது. திசைநோக்கித் தொழுதல் இராமபக்திக்கு அடையாளம். மூத்தோர்பால் இளையார் காட்டும் ஒரு மரபு எனலாம். “மன் பெரிய மாமனடி மகிழ்ந்து திசை வணங்கி” (சிந்தா. 849) காண்க. இராமனுக்குப்பரதன் தீங்கு செய்ய வந்துள்ளதாகக் கருதிய தனது பேதைமையைக் குகன் தனக்குள்ளே விசாரித்தான்.ஆதலின், “எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” என்றான். பரதனைச்சந்தேகித்தற்குக் குகன் வருத்தம் உறுதல்வெளிப்படை. 30 |