குகன் நாவாயில் தனியே கங்கையின் வடகரை வந்து சேர்தல்  

2333.‘உண்டு இடுக்கண் ஒன்று
     உடையான், உலையாத அன்பு உடையான்,
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான்
     குறிப்பு எல்லாம்
கண்டு, உணர்ந்து, பெயர்கின்றேன்’
     காமின்கள் நெறி’ என்னா,
தண் துறை, ஒர் நாவாயில், ஒரு
     தனியே தான் வந்தான்.

   ‘உண்டு இடுக்கண் ஒன்று உடையான்- புதிதாக உண்டாகிய துன்பம்
ஒன்றை உடையவனும்;  உலையாத அன்பு உடையான் -
இராமன்பால்
சிறிதும் தளர்ச்சியுறாத அன்பு கொண்டவனும்; கொண்ட தவவேடமே -
(அந்த இராமன்) கொண்டிருந்த தவ வேடத்தையே; கொண்டிருந்தான்-
தானும்கொண்டுள்ளவனும் ஆகிய இப்பரதனது; குறிப்புஎல்லாம் - மனக்
கருத்து எல்லாம்; கண்டு- நேரில் பார்த்து அறிந்து; உணர்ந்து- அதனை
என் அநுபவத்தாலும் நுகர்ந்து; பெயர்கின்றேன் - திரும்பி வருகின்றேன்;
நெறி காமின்கள்
- (அதுவரை) வழியைப்பாதுகாத்திருங்கள்;’என்னா -
என்று சொல்லி; தண்துறை - (கங்கையின்) குளிர்ந்தநீர்த்துறையில்; தான்
ஓர் நாவாயில் ஓரு தனியே வந்தான்-
(குகன்) தான் ஒருபடகில் வேறு
யாரும் இன்றித் தனியே வந்து சேர்ந்தான்.

     தோற்றத்தால் விளங்காத பல செய்திகள் நெருக்கத்தால்
விளங்கக்கூடும் ஆதலின் பரதன் மனக்கருத்து எல்லாம் ‘கண்டு உணர்ந்து
பெயர்கின்றேன்’ என்று குகன் கூறினான். இங்கே ‘அறிந்து’ என்னாது
‘உணர்ந்து’ என்றது சிறப்பு. துக்காநுபவம் ஆகிய அன்பின் செறிவு
உணர்ச்சியொத்தவரிடையே அநுபவம் ஆதல் அன்றி, அறிவினால்
ஆராய்ந்தறியும் பொருள் அன்று ஆதலின், இடுக்கணும், உலையாத அன்பும்
உடைய பரதனை, அதுபோலவே இடுக்கணும், உலையாத அன்பும் உடைய
குகன் உணர்ச்சியொத்தலால் உணர்ந்து பெயர்கின்றேன் என்கிறான்; இந்நயம்
அறிந்து உணரத் தக்கது.‘ஒரு தனியே தான் வந்தான்’ என்றது இதுகாறும்
பரதனை மாறாகக் கருதித் தன் படை வீரர்களிடம் பேசியவன் ஆதலின்,
தன் கருத்து மாற்றம் அவர்க்குப் புலப்படாமை கருதியும், அவர்களால் வேறு
தொல்லைகள் உண்டாகாமை கருதியும், அவர்களுள் யாரையும் உடன்
கொள்ளாது தனியே வந்தான் என்க. அதுபற்றியே கம்பரும் ‘தனியே’
என்னாது ‘தான்’ என்றும், ‘ஒரு தனியே’ என்றும் அழுத்தம் கொடுத்துக்
கூறினார். அரசராவார் தம் கருத்தையும் தம் மன மாற்றத்தையும் தம்கீழ்
வாழ்வார் அறியாதவாறு போற்றிக் காத்தல் வேண்டும் என்னும் மரபறிந்து
மதிப்பவர் கம்பர் என்க. ‘துன்பம் ஒரு முடிவு இல்லை’ என்றவர், ‘உண்டு
இடுக்கண் ஒன்று உடையான்’ என்று மீண்டும் கூறியது, இராமன் வனம்
போவதால் ஏற்பட்ட துன்பம் இராமனைக் கண்டு மீண்டு போம்போது
குறைதல் கூடும் ஆயினம் இவற்றுக்கெல்லாம் ‘தான் காரணமானோம்’ என்று
கருதும் பழிபடப் பிறந்தேன்’ என்ற இடுக்கண் என்றும் மாறாது கிடத்தலின்’
உண்டு இடுக்கண் ஒன்று உடையான்’ என்று அதனையும் கருதிப் பரதனது
புறத் தோற்றத்தையும் அகத் தோற்றத்தையும் புலப்படுத்தியதாக அமைகிறது.
உலையாத அன்பு - வேறு காரணங்களால் நிலைகுலையாமல், என்றும்
ஒருபடித்தாக இருக்கும் தளர்ச்சியில்லாத அன்பு என்றவாறாம்.          31