குகன் பரதனிடம் வந்த காரணம் கேட்டல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 2335. | தழுவின புளிஞர் வேந்தன் தாமரைச் செங்கணானை, ‘எழுவினும் உயர்ந்த தோளாய்! எய்தியது என்னை?’ என்ன, ‘முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் வழுவினன்; அதனை நீக்க, மன்னனைக் கொணர்வான்’ என்றான். |
தழுவின புளிஞர் வேந்தன்- (அவ்வாறு பரதனைத்) தழுவிக் கொண்ட வேடர் தலைவனான குகன்; தாமரைச் செங்கணானை - செந்தாமரை போலும் கண்களை உடைய பரதனைப் (பார்த்து); ‘எழுவினும் உயர்ந்த தோளாய்!- கணைய மரத்தினும் வன்மைமிக்குயர்ந்த தோள்களை உடைய பரதனே!; எய்தியது என்னை’ என்ன- (கங்கைக் கரைக் காட்டிற்கு) நீ வந்த காரணம் என்ன என்று வினாவ; (பரதன்) உலகு முழுது அளித்த தந்தை - உலகம் முழுவதையும் ஒரு குடை நீழலில் ஆட்சி செய்த சக்கரவர்த்தியாகியஎன் தந்தை தயரதன்; முந்தையோர் முறையினின்றும் வழுவினன் - தன் மரபில் முன்னுள்ளாரது நீதிமுறையிலிருந்தும் தவறிவிட்டான்; அதனை நீக்க - அந்த அநீதியை நீக்கும் பொருட்டு; மன்னனைக் கொணர்வான்’ - முறைப்படி அடுத்து அரசனாகிய இராமனைத் திரும்ப அழைத்துக்கொண்டு செல்வதற்காக (வந்தேன்); என்றான் - என்று சொன்னான். தந்தை என்ற நிலையிலிருந்து முந்தையோர் முறையில் தயரதன் வழுவினானே அன்றி மன்னன்என்ற நிலையில் இருந்து அன்று என்பது போல் கூறியது ஒரு நயம். பின்னரும் ‘அண்ணனைக்கொணர்வான்’ ‘இராமனைக்கொணர்வான்’ என்று கூறாமல் ‘மன்னனைக் கொணர்வான்’ என்றது காட்டில்இருப்பினும், நாட்டில் இருப்பினும் இராமனே அயோத்திக்கு அரசன் என்பதில் பரதனுக்குள்ள உறுதிவிளங்குகிறது. இராமன் திரும்ப அயோத்திக்குச் செல்கிற அளவிலேயே முந்தையோர் முறைசரியாகிவிடும் என்று பரதன் கூறியது சிந்திக்கத்தக்கது. இப்பாடலில் ‘தழுவின’ என்பதற்குத் ‘தழுவப்பட்ட எனப் பொருள் பட்டவன், தழுவியவன் இருவருள் தழுவியவனே முதலில் பேச இயலும் என்பது தழுவப்பட்டவன் உரையாற்ற முடியும் என்பதும் அறிந்ததே. குகனைத் தன் அண்ணனாகக் கருதும் பரதன் முற்பட்டுக் குகனைத் தழுவுதல் எங்ஙனம்? எங்கும் தழுவல் கம்பர் வழக்கிலும் இல்லையென்பதுமுன்னும் பின்னும் வரும் கம்பர் கூற்றுகளாலும் உணரப்படும். 33 |