கங்கையின் தென்கரை சேர்க்கக் குகனைப் பரதன் வேண்டல்  

2346. அவ் இடை, அண்ணல்தானும், அன்று,
     அரும் பொடியின் வைகி,
தெவ் இடைதர நின்று ஆர்க்கும்
    செறி கழல் புளிஞர் கோமா அன்!
இவ் இடை, கங்கை ஆற்றின்
    ஏற்றினை ஆயின், எம்மை
வெவ் இடர்க் கடல் நின்று ஏற்றி,
    வேந்தன்பால் விடுத்தது’ என்றான்.

    அண்ணல் தானும்- பரதனும்; அவ் இடை - அந்த இடத்தில்;
அன்று - அன்றையிரவு; அரும்பொடியின் வைகி- தற்குதற்கியலாத புழுதி
மண்ணில் தங்கியிருந்த, (பொழுதுவிடிந்ததும்); ‘தெவ் இடை தர -
பகைவர்கள் தோற்றோடும்படி; நின்று ஆர்க்கும்செறிகழல்- தங்கி ஒலிக்கும்
கட்டப்பட்ட வீரக்கழல் அணிந்த; புளிஞர் கோமாஅன்! -வேடர்களுக்கு
அரசனாகிய குகனே!;  இவ் இடை - இந்த நேரத்தில்; கங்கை ஆற்றின்-
கங்கை ஆற்றிலிருந்து; எம்மை ஏற்றினை ஆயின்- எம்மைப் கரையேற்றிச்
(தென்கரை)சேரச் செய்தால்; வெவ இடர்க்கடல் நின்று ஏற்றி - கொடிய
துயரக் கடலிலிருந்துகரையேற்றி; வேந்தன்பால் விடுத்தது’ - இராமன்பால்
அனுப்பியது ஆகும்;’ என்றான்- என்று சொன்னான்.

     இவ் இடை என்பது காலம் இடமாயிற்று. இராமன் வைகிய இடம்
கண்ட பரதன் அந்த இடத்திலேயே புழுதி மண்ணில் தங்கினானாம். கங்கை
ஆற்றைத் தாண்டித் தென்கரை விடுதல் - துன்பக் கடலைத் தாண்டி
இராமனிடம் சேர்பித்ததாகும் என்றானாம் இராமனை வேந்தன், மன்னன்
என்றே குறித்துச் செல்லும் பரதனது உளப்பாங்கை இங்கு அறிக. ஆற்றின்
ஏற்றுதல் என்பது ஆற்றிலிருந்து கரை யேற்றுதல் என்பதனைக்
குறித்தவாறாம்.                                                44