2350. | குரிசிலது ஏவலால், அக் குரகதத் தேர் வலானும், வரிசையின் வழாமை நோக்கி, மரபுளி வகையின் ஏற்ற, கரி, பரி, இரதம், காலாள், கணக்கு அறு கரை இல் வேலை, எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே! |
குரிசிலது ஏவலால்- பரதனது கட்டளையால்; அக் குரகதத் தேர்வலானும் - குதிரைகள் பூட்டிய தேரைச்செலுத்தலில் வல்ல அச்சுமத்திரனும்; வரிசையின் வழாமை நோக்கி - முறைப்படி தவறாமல் பார்த்து; மரபுளி வகையின் ஏற்ற - அவரவர்க்குள்ள மரபுகளின்படி (படகுகளில்)ஏற்றியனுப்ப; கரி, பரி, இரதம், காலாள் - யானை, குதிரை, தேர், வீரர் என்றுசொல்லப்பெறும்; கணக்கு அறு - எண்ணிக்கையில் அளவுபடாத; கரை இல் வேலை - கரையற்றசேனைக் கடல்; எரிமணி திரையின் வீசும் - ஒளிவீசும் மணிகளை அலைகளால் (கரைக்கண்)எறிகின்ற; கங்கை யாறு - கங்கையாற்றை; ஏறிற்று - கடந்து அக்கரை சென்றுஏறியது. முன்செல்வார்,பின்செல்வார் என்ற முறையும், நாவாயில் முன் அமர்வோர், பின் அமர்வோர், இருப்போர், நிற்போர், தனித்து ஏற்றப்படுவோர், குழுவாகஏற்றப்படுவோர் என உள்ள எல்லாம் அடங்க, ‘வரிசையின் வழாமை’ என்றும், ‘மரபுளி வகையின்’ என்றும் கூறினார். சேனைக்கடல் யாறு ஏறிற்று என்றது ஒரு நயம். அன்றே என்றது வியப்புக் குறித்து வந்தது. ‘அன்று’, ‘ஏ’ அசைகள். 48 |