2353. பாங்கின் உத்தரியம் மானப்
     படர் திரை தவழ, பாரின்
வீங்கு நீர் அழுவம்தன்னுள்,
     விழு மதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற,
     ஒளித்து அவன் உயர்ந்த கும்பம்,
பூங் குழற் கங்கை நங்கை முலை எனப்
     பொலிந்த மாதோ!

     பாங்கின் -அருகில்; உத்தரியம் மான - பெண்கள் அணிந்துள்ள
மேலாடைபோல; படர் திரை தவழ - கரைமேல் சென்று தவழும்
அலைகள் செல்ல; பாரின் வீங்குநீர் அழுவம் தன்னுள் - உலகில்
மிகுந்த நீர்ப்பரப்பையுடைய யாற்றுப் பள்ளத்துள்; விழும் மதக் கலுழி
வெள்ளத்து ஓங்கல்கள்
- விழுகின்ற மதநீர்ப்பெருக்காகிய கலங்கள்
வெள்ளத்தை உடைய மலைபோன்ற யானைகள்; ஒளித்துத் தலைகள்
தோன்ற
- உடல் முழுவதும்நீரால் மறைக்கப்பட்டுத் தலைகள்மட்டும் மேல்
தோன்ற; அவண்  உயர்ந்த கும்பம் -அங்கே கங்கைப் பரப்பின் மேல்
உயர்ந்து  தோன்றுகின்ற  மத்தகங்கள் (தலைமேடுகள்); பூங்குழல் கங்கை
நங்கை முலை எனப் பொலிந்த
- அழகிய கூந்தலை உடைய கங்கை
மகளின்தனங்களைப்போல விளங்கின.

     கங்கையாற்றில் நீந்திச் செல்லும் யானைகளின் உடல்கள் நீரில் மறைய
மேல் தெரியும்தலைமேடுகள், அவற்றின் அருகே புரளும் அலைகள்
இரண்டையும் கங்கா நதியின் தனங்களாகவும்,அதன்மேல் அணிந்து நழுவிச்
செல்லும் மேலாடையாகவும் கற்பனை செய்தார். மாது, ஓஅசை.        51