மரக்கலங்கள் சென்று சென்று மீளும் காட்சி  

2359. இக் கரை இரைத்த சேனை
     எறி கடல் முகந்து, வெஃகி,
அக் கரை அடைய வீசி, வறியன
     அணுகும் நாவாய்-
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன
     போக்கிப் போக்கி,
அக் கணத்து உவரி மீளும்
     அகல் மழை நிகர்த்த அம்மா!

     இக் கரை - (கங்கையின்) வடகரையில் உள்ள; இரைத்த சேனை
எறிகடல்
-ஒலித்துக்கொண்டுள்ள சேனையாகிய அலைகடலை; வெஃகி
முகந்து
- விரும்பிஏற்றுக்கொண்டு; அக்கரை - தென்கரையில்; அடைய
வீசி - முழுவதும் இறக்கிவிட்டு; வறியன - ஒன்றும் இல்லாதனவாய்;
அணுகும் - (வடகரை வந்து) சேரும்; நாவாய் - மரக்கலம்; அலை ஆழி
புக்கு
- அலை வீசும் கடலின் கண் புகுந்து; நல் நீர் -மிகுதியான நீரை;
பொறுத்தன - சுமந்தனவாய்ப் (புறப்பட்டு); போக்கிப் போக்கி -
(மழைப்பெய்து) கழித்துக் கழித்து;  அக்கணத்து - அடுத்த கணத்திலேயே;
உவரிமீளும் - (மீண்டும் முகப்பதற்காகக்) கடலுக்குத் திரும்புகின்ற; அகல்
மழை
- அகன்ற மேகத்தை;  நிகர்த்த - ஒத்திருக்கின்றன.

     உவமையணி. விரைவாக இறக்குதலின் ‘வீசி’ என்றார். “தேர்வீசு இருக்கை” (புறநா. 69)என்பது  காண்க. ‘நல்நீர்’ என்றது  மிகுதியான நீர் எனப் பொருள்படும்  - “நல்ல பாம்பு, நல்ல வெயில்” என்றார்போல. “நன்று பெரிதாகும்” என்பது  (தொல். சொல். உரி. 45) காண்க.பெரிது மிகுதியாம். கடல் நீரை மேகம் முகந்து  நன்னீராக்குதலின் நன்மையான நீர் என்னாமோஎனின், பொறுத்தனவாகிய நீர் ஆதலின், அது  உவர்நீரே யாம் என்க. ‘அம்மா’வியப்பிடைச்சொல்.                    57