2360. அகில் இடு தூபம் அன்ன
     ஆய் மயிர் பீலி ஆர்த்த
முகிழுடை முரண் மாத் தண்டு
     கூம்பு என, முகிலின் வண்ணத்
துகிலொடு தொடுத்த செம் பொன்
     தகட்டிடை தொடுத்த முத்தின்
நகு கொடி நெடிய பாயா,
     நவ் எனச் சென்ற நாவாய்

     நாவாய் - மரக்கலங்கள்; அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில்
பீலி  ஆர்த்த
- அகிற்கட்டைகளால் உண்டாக்கப்பெற்ற புகையைப்
போன்ற அழகிய மயில் தோகைகள்கட்டப்பெற்ற;  முகிழுடை முரண்மாத்
தண்டு - அரும்புபோன்ற உறுப்பைத் தலையிற் கொண்ட(தேரிலிருந்து
பிரித்த) தண்டுகள்; கூம்பு என - பாய்மரமாகத் தோன்ற; முகிலின்
வண்ணத் துகிலொடு தொடுத்த
- மேகநிறமான துணியொடு கட்டப்பெற்ற;
செம்பொன் தகட்டிடைதொடுத்த - செம்பொன்னால் ஆகிய தகட்டின்
இடையே அழகுறத் தைத்த; முகத்தின் நகுகொடி -முத்துக்களால் விளங்கும்
கொடிகள்; நெடிய பாயா - நீண்ட பாயாகத் தோன்ற; நவ் எனச்சென்ற -
பெரிய பாய்மரக் கப்பல்கள் போலச் சென்றன.

     தேரைப் பிரித்துப் படகில் ஏற்றினர் ஆதலின், தேர்த்தண்டும்
கொடியும் இங்கே பாயும்,பாய்மரமும் போல் தோன்றின. சிறிய
மரக்கலங்கள் பெரிய பாய்மரக் கப்பல்கள் போலத்தோன்றின.
தற்குறிப்பேற்ற உவமையணி.                                     58