2381. | துறந்த செல்வன் நினைய, துறக்கம்தான் பறந்து வந்து படிந்தது; பல் சனம், பிறந்து வேறு ஓர் உலகு வெற்றாரென, மறந்து வைகினர், முன்னைத் தம் வாழ்வு எலாம். |
துறந்த செல்வன் - (யான் எனது என்னும் அகப் புறப் பற்றுகளைக்) கைவிட்டு தவச்செல்வத்தையுடைய பரத்துவாசன்;நினைய - விருந்திட நினைத்த அளவில்; துறக்கம் - சுவர்க்க உலகம்; பறந்து வந்து படிந்தது- விண்ணிழிந்து வந்து காட்டில் தங்கியது; பல் சனம் -(சேனையின் உள்ள) பல மக்கள் கூட்டமும்; பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என - மறுபிறப்பு எடுத்து வேறு உலகத்தை அடைந்தவர்களைப்போல; முன்னைத் தம் வாழ்வு எலாம் -முன்னைய தம்முடைய வாழ்க்கைகளை எல்லாம்; மறந்து வைகினர் - மறந்து இன்பமார்ந்து இருந்தார்கள். சீரிய தவம் உடையோர் நினைத்த மாத்திரையானே அனைத்தும் நடக்கும் ‘வேண்டியவேண்டியாங்கு எய்தலான் செய்தவம், ஈண்டு முயலப் படும்” (குறள்265.) என்றார் வள்ளுவரும்.வேறுலகு என்றது ஈண்டுச் சுவர்க்கமாகும். முன்னைய வாழ்வு என்றது அயோத்தியில் வாழ்ந்ததை. இராமனைப் பிரிந்த சோகமும் தொடர்ந்து வழிநடந்து வந்து பட்ட வருத்தமும் மறந்தபடி. ‘தான்’உரையசை. 7 |