2384. கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார்,
செம்பொனின் கல ராசி திருத்தினார்;
அம்பரத்தின் அரம்பையர், அன்பொடும்,
உம்பர்கோன் நுகர் இன் அமுது ஊட்டினார்.

     கொம்பின்- பூங்கொம்பு போல; நின்று - வளைந்து நின்று; நுடங்குறு-
ஒல்கிஅசைகின்ற; கொள்கையார் - பண்புடைய;  அம்பரத்தின்
அரம்பையர் - வானுலக அரம்பை மாதர்;(மைந்தர்க்கு) செம்பொனின் கல
ராசி
- செம்பொன்னால் ஆகிய அணிகளை; திருந்தினார் - நன்கு
அணிவித்து; அன்பொடும் - பிரியத்தோடும்; உம்பர்கோன் நுகர் இன்
அழுது
- தேவேந்திரன் உண்ணக் கூடிய இனிய அமுத உணவினை;
ஊட்டினார் - உண்பித்தார்.

     கொம்பின் - ‘இன்’ உவம உருபு. கல ராசி - அணிகலன்களின்
தொகுதி; பல்வேறு அணிகள்.இந்திரன் உண்ணும் அமுதத்தை
இவ்வாடவர்களுக்கு அரம்பையர் ஊட்டினார் ஆம். உரைத்து, ஆட்டி,
உடுத்தி,  திருத்தி,  அழுது  ஊட்டினார் என்க.  மேல் முடியும்.        10