2385. | அஞ்சு அடுத்த அமளி, அலத்தகப் பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவ நஞ்சு அடுத்த நயனியர், நவ்வியின் துஞ்ச, அத்தனை மைந்தரும் துஞ்சினார். |
அலத்தகப் பஞ்சு அடுத்த - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்ற; பரிபுர -சிலம்பு அணிந்த; பல்லவ - தளிரனைய பாதங்களையும்; நஞ்சு அடுத்த - விடம்தீட்டப்பெற்ற; நயனியர் - கண்களையும் உடைய அரம்பையர்; அஞ்சு அடுத்த அமளி - ஐந்துபொருள்களை உள்ளடக்கிய மெத்தையின் மேல்; நல்வியின் துஞ்ச - பெண்மான்கள் போல(அருகில்) உறங்க; அத்தனை மைந்தரும் - (பரதனுடன் வந்து) எல்லா இளைஞரும்; துஞ்சினார் - தூங்கினார்கள். அமுதூட்டியபின் அம்மகளிர் படுத்துக்கிடக்க மைந்தரும் தூங்கினார் என்க. நயனியர் துஞ்சஎன்றது ஈண்டுப் போகத்தின்பின் நிகழும் அவச உறக்கமாகும் என்பது குறிப்பு. அஞ்சு - ஐந்துஎன்பதன் வழக்குச் சொல்லாகிய போலி. அஞ்சு அடுத்த அமளி - அன்னத்தூவி, இலவம் பஞ்சு, செம்பஞ்சு, மயில்தூவி வெண்பஞ்சு என்னும் ஐந்து பொருள்களாற் செய்யப்பெற்ற மெத்தை.இதனைச் “சிறு பூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம், உறுதூவி சேக்கையோரைந்து” என்பதனான் அறிக.‘ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி” (சிந்தா. நச். உரை. 838.) அஞ்சு அடுத்த அமளி - பஞ்சசயனம் ஆம். “மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி” (திவ்ய. திருப்பாவை 491) என்பதன்உரையுள் பஞ்ச சயனமாவது, அழகு, குளிர்ச்சி, மிருது, மணம், வெண்மை ஆக இவை; அஞ்சு உருவிட்டுச்செய்த படுக்கை என்றுமாம் என்ற பெரியவாச்சான்பிள்ளை உரையை ஈண்டுக் கருதுதல் நலம் தரும்அலத்தகம் - செம்மை. அலத்தகப் பஞ்சு எனலின் செம்பஞ்சாம். நஞ்சு அடுத்த - விடத்தை ஒத்தஎன்றுமாம். 11 |