2386. | ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என, கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் - வேந்தர் ஆகி, சிவிகையின் வீங்கு தோள் மாந்தர்காறும், வரிசை வழாமலே, |
வேந்தர் ஆதி- (பரதன் சேனையில் உள்ள) அரசர் முதலாக; சிவிகையின் வீங்கு தோள் மாந்தர்காறும்- பல்லக்குத் தூக்குதலால் பருத்த தோளை உடைய மனிதர்கள்வரை; வரிசை வழாமல் - அவரவர்க்குரிய முறைமையில் சிறிதும் குறைவுபடாமல்; கூந்தல் தெய்வ மகளிர் -கூந்தலழகையுடைய தெய்வப் பெண்கள்; ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என - மிக்கசெல்வத்தை உடைய தேவர்களைக் கொண்டாடுவதுபோல; கொண்டாடினார் - பாராட்டிஉபசரித்தார்கள். மேலோர் முதல்கீழோர்காறும் ஒரு நிகராக இமையர் போல இன்பம் நுகர்ந்தபடியைக்கூறினார். ‘வேந்தர் சிவிகையின் வீங்குதோள் மாந்தர்’ என்பது மேல், கீழ்நிலைகளைச் சுட்டி நின்றது - “சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை” (குறள் 37.) என்பது காண்க. கூந்தல் அழகு பிற அழகுகளுக்கும் உபலக்கணையாம்.“குஞ்சி அழகும்” “மயிர் வனப்பும்” என்பன (நாலடி. 131. சிறுபஞ்ச. 35) காண்க. “ஏந்துசெல்வத் திமையவர்” என்றது உலகில் மனிதர் செல்வத்தை ஏந்துவர்; ஆனால் இமையவரைச் செல்வம் ஏந்துகிறது என்ற நயம் பற்றி ‘ஏ’ ஈற்றசை. 12 |