2389.மான்று, அளிக் குலம் மா மதம் வந்து உண, -
தேன் தளிர்த்த கவளமும், செங் கதிர்
கான்ற நெல் தழைக் கற்றையும், கற்பகம்
ஈன்று அளிக்க, நுகர்ந்தன - யானையே.

     யானை - (அச்சேனையில் உள்ள) யானைகள்; அளிக்குலம்- வண்டுக்
கூட்டங்கள்;  மா மதம் - (தம்முடைய) பெரிய மதநீர்ப் பெருக்கை; வந்து
மான்றுஉண
- வந்து  உண்டு மயங்க; (தாம்) கற்பகம் - கற்பக மரங்கள்;
தேன்தளிர்த்த கவளமும் - தேன் மிகுதியாகக் கலக்கப்பெற்ற
உணவுருண்டையையும்; செங்கதிர்கான்ற நெல்தழைக் கற்றையும் -
சிவந்த கதிர்களை யீன்ற நெற்பயிரின்கதிர்க்கட்டுகளையும்; ஈன்று
அளிக்க
- பெற்று  உண்ணத் தர;  நுகர்ந்தன -அவற்றை உண்டு
இன்புற்றன.

     யானைகள் உண்டபடி கூறினார்.  மதநீரை வண்டுகள் உண்ண.  தாம்
கற்பகம் தந்த கவளமும்தழையும் உண்டன என்றார். நெய்மிதி கவளம் தரல்
யானைக்கு வழக்கம். இங்குத் தேன் மிதிகவளம் என்றது  தேவருலகத்துச்
சிறப்பாம். ‘ஏ’ ஈற்றசை.                                         15