2395. | எழுந்தது துகள்; அதின், எரியும் வெய்யவன் அழுந்தினன்; அவிப்ப அரும் வெம்பை ஆறினான்; பொழிந்தன கரி மதம், பொடி வெங் கானகம் இழிந்தன, வழி நடந்து ஏற ஓணாமையே. |
(சேனைகள் சேறலான்) துகள் - புழுதிப்படலம்; எழுந்தது - மேல் கிளம்பியது; எரியும் வெய்யவன் - தகிக்கும் சூரியன்; அதின் அழுந்தினன் -அப்புழுதியில் அழுந்திப் போனான்; அவிப்ப அரும் வெம்மை ஆறினான் - பிறிதொன்றால்அணைத்தற்கு முடியாத தனது வெம்மை நீங்கப் பெற்றான்; கரி பொழிந்தன மதம் -யானைகள் பொழிந்தனவாகிய மதநீர்; பொடிவெங்கானகம் வழிநடந்து ஏற ஒணாமை- புழுதியுடைய கொடிய காட்டுவழியில் நடந்து மேற்சேற முடியாதபடி (வழுக்கும் சேறு செய்து); இழிந்தன - (எங்கும்) பெருகின. பாலை நிலத்தின் கொடுமையும் யானைகளின் மிகுதியும் கூறியவாறு. ‘ஏ’ ஈற்றசை. 21 |