2396. | வடியுடை அயிற் படை மன்னர் வெண்குடை, செடியுடை நெடு நிழல் செய்ய, தீப் பொதி படியுடைப் பரல் உடைப் பாலை, மேல உயர் கொடியுடைப் பந்தரின், குளிர்ந்தது எங்குமே. |
தீப்பொறி படியுடை - நெருப்பு உள் தங்கிய இடத்தை உடைய; பரல் உடைப்பாலை - பருக்கைக் கற்களை உடைய பாலைநிலம்; வடி உடை - கூர்மை பொருந்திய; அயிற்படை - வேற்படைய உடைய; மன்னர் - அரசர்களது; வெண்குடை -வெண்குடையானது; செடி உடை நெடு நிழல் செய்ய - அடர்ந்துள்ள நீண்ட நிழலைச்செய்தலான்; மேல் உயர் கொடி உடைப் பந்தரின் - மேலே உயர்ந்துள்ள கொடிகள் படர்ந்துள்ள பந்தல்போல; எங்கும் - எவ்விடமும்; குளிர்ந்தது - குளிர்ச்சி உடையதாக ஆயிற்று. செடித்தன்மையாவது அடத்தியாகவும் குட்டையாகவும் இருத்தல்; அதனுள் குட்டையை விலக்கவேண்டி‘நெடுநிழல்’ என்றாராதலின், அடர்ந்து நீண்ட நிழல் என்று பொருள் ஆயிற்று. மன்னர் குடையின்மிகுதியும் உயர்ச்சியும் குறித்தது. பந்தர் நிழல் தருதலும் அதன் மேலும் கொடி குளிர்ச்சிதருதலும் உண்டாதலின், மன்னர் தம் குடையின் நிழலுக்கும் குளிர்ச்சிக்கும் ஏற்புடையஉவமையாயிற்று. கொடிப்பந்தர் என்னும் ஆம். ‘ஏ’ ஈற்றசை. 22 |