இலக்குவன் போர்க் கோலம் பூண்டு, வீர உரை பகர்தல்  

2403.கட்டினன் கரிகையும் கழலும்; பல் கணைப்
புட்டிலும் பொறுத்தனன்; கவசம் பூட்டு அமைத்து
இட்டனன்; எடுத்தனன் வரி வில்; ஏந்தலைத்
தொட்டு, அடி வணங்கி நின்று, இனைய சொல்லினான்.

    சுரிகையும் சுழலும் கட்டினன்- (இடையில்) உடைவாளையும்,
(காலில்) வீரக்கழலையும் கட்டிக்கொண்டு;  பல்கணைப் புட்டிலும்
பொறுத்தனன்
- பல்வகைஅம்புகளையுடைய தூணியைத் (தோளில்)
சுமந்து;  கவசம் பூட்டு அமைத்து இட்டனன் -போர்க் கவசத்தை
(உடம்பிற்) பூட்டிக்கொண்டு; வரிவில் எடுத்தனன் - கட்டமைந்தவில்லைக்
(கையில்) எடுத்துக்கொண்டு; ஏந்தலை அடிதொட்டு வணங்கி நின்று -
இராமனைத்திருவடி தொட்டு வணக்கம் செய்து எழுந்து நின்று; இனைய
சொல்லினான்
- இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

     போர்க்குச் சன்னத்தனானான் என்றார். ஏந்தல் - இராமன்;
உயர்ந்தோன் என்னும்பொருளி்ல் வந்தது. திருவடி தொட்டு வணங்குதல்
என்பது  ஒரு மரபு.                                           29