2409.‘நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய்
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும்,
கவந்தமும், “உலகம் நின் கையது ஆயது” என்று
உவந்தன குனிப்பன காண்டி, உம்பர்போல்.

     ‘நிவந்த - உயர்ந்து வழிந்து ஒழுகிய; வான் குருதியின் நீத்தம் -
பெரிய இரத்த வெள்ளத்திலே; நீந்தி - நீந்திச் சேறலால்; மெய் சிவந்த-
உடம்பு செந்நிறமாகப் பெற்ற; சாதகரொடு - பூத கணங்களோடு; சிறுகண்
கூனியும்
- (உடம்பிற்கு ஒவ்வாத) சிறிய கண்ணை உடைய பேய்களும்;
கவந்தமும் - தலையற்றஉடற்குறையும்; “உலகம் நினகையது ஆயது”
என்று
- உலகமனைத்தும் இராமனாகிய உன் வசம்ஆய்விட்டது  என்று;
உம்பர் போல்- தேவர்கள் (மகிழ்தல்) போல; உவந்தன- மகிழ்ந்தனவாய்;
குளிப்பன - நடனம் ஆடுவன; காண்டி - பார்ப்பாயாக....

     சாதகரொடு ‘கூனியும் கவந்தமும் குளிப்பன’ என முடியும்
‘‘பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர்,  அஃறிணை முடிபின
செய்யுளுள்ளே” (தொல். சொல். கிளவி. 51.) என்பவாதலின்‘குனிப்பன’ என
அஃறிணையாய் முடிந்தது. தேவர்கள் மகிழ்தல் இயல்பு.  பேய்கள் மகிழ்ந்து
ஆடுதலாகக் கூறியது  தற்குறிப்பேற்றமாம்.                          35