2410.‘சூழி வெங் கட கரி, துரக ராசிகள்,
பாழி வன் புயத்து இகல் வயவர், பட்டு அற,
வீழி வெங் குருதியால் அலைந்த வேலைகள்
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால்.

     ‘சூழி - முகபடாம் அணிந்த;  வெங் கடகரி - கொடிய மதம் உடைய
யானைகள்; துரக ராசிகள் - குதிரைத் தொகுதிகள்; பாழி - பருத்த; வன்-
வலிய;  புயத்து - தோளை உடைய; இகல் வயவர் - பகைத்த வீரர்கள்;
பட்டு அற - செத்து விழ;  வீழி - வீழ்ந்த; வெங்குருதியால் - கொடிய
இரத்தப் பெருக்கால்; அலைந்த வேலைகள் ஏழும் - அலை வீசும் ஏழு
கடல்களும்; ஒன்றாகி நின்று - ஒரு கடலாகியிருந்து; இரைப்ப- ஒலிசெய்ய;
காண்டி -பார்ப்பாயாக...

     நால்வகைச் சேனைகளும் அடியோடு அழிதலால் உண்டான
குருதியாறு கூடுதலால் ஏழுகடல்களும்ஒன்றாகி இரரைத்தன. வீழி - வீழிப்
பழம் போன்று சிவந்த குருதி என்றும் ஆம். அலைந்தஎன்பது
வேலைகளுக்கு அடை.  இனி,  குருதியால் அலைவீசிய வேலைகள் ஏழும்
ஒன்றாகின எனினும்அமையும். ‘ஆல்’ ஈற்றசை.                      36