2417.‘நம் குலத்து உதித்தவர், நவையின் நீங்கினர்
எங்கு உலப்புறுவர்கள் ? எண்ணின், யாவரே
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்?-
பொங்கு உலத் திரளொடும் பொருத தோளினாய்!

     பொங்கு - வளர்ச்சியடைந்து;  திரள் உலத்திரளொடும் - திரண்ட
கல்தூணுடனே; பொருத - மாறுபட்ட (அதனினும் சிறந்த); தோளினாய்! -
தோளினைஉடையவனே!;  நம் குலத்து உதித்தவர் - நம்முடைய சூரிய
குலத்தில்தோன்றியவர்களாகிய;  நவையுள் நீங்கினர் - குற்றத் திலிருந்து
நீங்கிய அரசர்கள்;எங்கு உலப்புறுவர்கள்? - எவ்வாறு
அளவிடப்படக்கூடியவர் (அளவிடமுடியாதவர்); எண்ணின் - யோசிக்கும்
இடத்து; தம் குலத்து ஒருவ அரும் - தம் குலத்தில்விட்டு விலக
முடியாத; தருமம் நீங்கினன் - அறத்திலிருந்து நீங்கியவர்கள்; யாவரே -
யார்?...... (ஒருவரும் இல்லை என்றபடி)

     அளவிடல் என்பது எண்ணிக்கையான் அன்று; அறிவு, ஆண்மை,
பெருமை என்னும் மூவகை ஆற்றலால்அளவுபடாதவர் என்றவாறாம்.
பொங்கு உலத்திரள் - பெரியதாகிய கற்றூண் எனலும் ஆம்.          43