பரதன் சேனையைத் தவிர்த்துத் தம்பியோடு இராமனை நெருங்குதல் 2422. | என்றனன், இளவலை நோக்கி, ஏந்தலும் நின்றனன்; பரதனும், நிமிர்ந்த சேனையை, ‘பின் தருக’ என்று , தன் பிரிவு இல் காதலின், தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான். |
ஏந்தலும்- இராமனும்; இளவலை நோக்கி - இலக்குவனைப் பார்த்து; என்றனன் - என்று (இவ்வாறு) சொல்லி; நின்றனன் - ; பரதனும் -; நிமிர்ந்த சேனையை- மிகுந்த (தன்) படைகளை; ‘பின் தருக’ என்று - பிறகு அழைத்து வருக என்று (சுமந்திரன்பால்) சொல்லி; தன் பிரிவு இல் காதலின் தன் துணைத்தம்பியும்-தன்னைப் பிரிதல் இல்லாத அன்புடைய தன் துணைவனான தம்பியாகிய சத்துருக்கனனும்; தானும்- தானுமாக; முந்தினான் - முற்பட்டு (இராமன் பால்) வந்தான். உடன் வந்தான் அமைச்சன் சுமந்திரன் ஆதலின் படைப் பொறுப்பை அவன்பால் சார்த்தினான்எனலாம். ‘தம்பியும் தானும் முந்தினான்’ என்பது தலைமைப்பொருட்கு வினைகொடுப்பவே தலைமையில்பொருளும் முடிந்தன வாவதோர் முறைபற்றி வந்தது. இனி பால் விரவாது எண்ணிச் சிறப்பினால் ஒருமை முடிபு பெற்றது எனலும் ஆம். தம்பியாதல் அன்றி எப்பொழுதும் தன்னைப் பிரியாது தனக்குத் துணையாக இருத்தல் பற்றிச் சத்துருக்கனனைத் ‘தன் துணைத் தம்பி’ என்று பரதன்கூறினான். 48 |